ஐகோர்ட் கிளை உத்தரவு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி: முன்பதிவு செய்தவர்களுக்காக காட்சிகளை அதிகப்படுத்தலாம்

மதுரை: தியேட்டர்கள் 100 சதவீத இருக்கை களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  ஐகோர்ட் மதுரை கிளை, ‘‘திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளே தொடர வேண்டும்’’ என கடந்த 8ம் தேதி கூறியிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத் தரப்பில், ‘‘மத்திய அரசு மற்றும் ஐகோர்ட் அறிவுறுத்தல்படி 100 சதவீத இருக்கைகளை அனுமதித்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.

தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில், ‘‘ஊரடங்கால் தியேட்டர்கள் பெரிதும் பாதித்துள்ளன. வரிச்சலுகை வழங்க வேண்டும். கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கவேண்டும்’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘தியேட்டர்களில் டிக்கெட் கவுன்டர்களில் அதிகளவிலான கூட்டம் உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் இருக்கக்கூடாது. இதை தவிர்க்க வேண்டும். முன்பதிவு செய்திருந்தாலும், 100 சதவீத இருக்கையை அனுமதிக்க முடியாது. முன்பதிவு செய்தவர்களுக்காக காட்சிகளை அதிகப்படுத்தி திரையிடலாம். தியேட்டர் உரிமையாளர்களின் தங்களது கோரிக்கை குறித்து அரசிடம் முறையிடலாம். அதை அரசு பரிசீலிக்கலாம். தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories:

>