×

டெல்டாவில் விடிய விடிய மழை 50,000 ஏக்கர் சம்பா சாய்ந்து சேதம்: விவசாயிகள் கவலை

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் அறுவடைக்கு தயாராக இருந்த 50,000 ஏக்கர் சம்பா நெற்பயிர் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டத்திலும் தொடர்ந்து மழை மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்தது.இதனால் கூடூர், மாங்குடி, மாவூர், தென்னவராயநல்லூர், ஓடாச்சேரி, கொராடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கம் சம்பா நெற்பயிர் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சூரக்கோட்டை, ஒரத்தநாடு, பூதலூர், பட்டுக்கோட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாய்ந்தது. புதுக்கோட்டையில் விடிய விடிய மழை பெய்தது. விராலிமலை அருகே துலக்கம்பட்டி, கீரனூர், மாத்தூர், மண்டையூர்,  தென்னலூர், இலுப்பூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம்  ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது.

மழைக்கு 3 பேர் பலி
தஞ்சை: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கனமழைக்கு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து துளசியம்மாள்(85) என்பவர் பலியானார். ராமநாதபுரம்: ராமநாதபுரம் கே.கே.நகரில் தொடர் மழையால் நேற்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து கூலித்தொழிலாளி சண்முகம் (22) பலியானார். அவரது கர்ப்பிணி மனைவி தாயம்மாள் (20), உறவினர் மூர்த்தி  படுகாயமடைந்தனர். தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா அனுக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோட்டைச்சாமி (61), கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியானார். அவர் தள்ளிட்டதால் மனைவி கண்ணாத்தாள் தப்பினார்.


Tags : Damage to 50,000 acres of samba slope by torrential rains in delta: Farmers worried
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...