தமிழகமெங்கும் தமிழர் திருநாளை சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழர் திருநாளை தமிழகமெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாடுவோம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் அந்நிய, ஆரிய, வடமொழிப் பண்பாட்டினை எதிர்த்து, தமிழர்களின் தனித்த அடையாளமாக விளங்கும் பொங்கல் திருநாளை நமக்கான விழாவாக, தமிழர் திருநாளாக தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பதை மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையாக மேற்கொண்டதுடன், திராவிட இயக்கத்தின் சார்பில், பொங்கல் விழாக்கள் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

உழைப்பின் மேன்மையைப் போற்றி, அந்த உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை, உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாளே தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளாகும். உலகின் மூத்த குடியான தமிழக் குடிக்கேயுரிய தனித்துவமான இந்தப் பண்பாடு மறுமலர்ச்சி காண வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன், தமிழர் திருநாளாகப் பொங்கல் விழா ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடும் வழக்கம் கடந்த முக்கால் நூற்றாண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மதச் சடங்குகள் இல்லை, மந்திரங்கள் இல்லை,அவரவர் வழிபடும் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு, அதற்கும் மேலாக உலகிற்கே வாழ்வளிக்கும் சூரியனை வணங்கி, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளையும் மறக்காமல் அவற்றுக்கும் நன்றி பாராட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாள் போல சிறப்பு மிக்க இன்னொரு விழாவை பண்பாடு போற்றும் பண்டிகையை காண முடியாது. அதனால் தான் திமுகவினர், பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே, பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

தற்காலத்திற்கேற்ற விளையாட்டுகள், வேடிக்கைகள் ஆகியவையும் பொங்கல் திருநாளையொட்டி மூன்று நாட்கள் கொண்டாடும் வழக்கமும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெருகியது. தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சிக்காலத்தில், பொங்கல் விழாவுடன் திருவள்ளுவர் நாளும் இணைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவுக்காக அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை வழங்கி இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் திட்டத்தைத் தொடங்கியவரும் தலைவர் கலைஞர் தான். ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளைப் போற்றிப் பாராட்டி, பொதுமக்களின் பங்கேற்புடன் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது திமுக.

சனாதனப் பிரிவினைகளை அகற்றி, சமூகநீதியைப் போற்றி, மதவெறிக்கு உலை வைத்து மதநல்லிணக்கம் எனும் மகிழ்ச்சி அனைத்து மக்களின் மனதிலும் பொங்கும் வகையில் ‘சமத்துவப் பொங்கல்’ விழாக்களை திமுகவினர் சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவது வழக்கம். பொங்கல் நம் விழா. தமிழர்களின் தனிப்பெரும் விழா. திராவிட இயக்கம் தமிழகமெங்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய விழா. காலந்தோறும் வெவ்வேறு வேடம் போட்டு வரும் பண்பாட்டுப் படையெடுப்புகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு துரத்தி அடித்து, தமிழ்ப் பெருமை காத்திடும் விழா. மகிழ்ச்சி பொங்கிடும் விழா. வெற்றியின் விளைச்சலுக்கான விழா. தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவோம். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். அவர்களின் வாழ்வின் விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பொன்னேரி, ஆவடியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவைச் சமத்துவப் பொங்கல் வைத்து இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 13ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், 14ம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாக்களில் உங்களில் ஒருவனான நானும் பங்கேற்கிறேன். மார்கழித் திங்களின் கடைசி நாளிலும், தை முதல் நாளிலும் தமிழகத்தில் எங்கெங்கும் பொங்கட்டும் சமத்துவப் பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில் சமத்துவப் பொங்கல் சிறக்கட்டும்.

* வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் இன்றைய இடையீடு, அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளைச் சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது. பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை கருத்திற் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.

Related Stories:

>