சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக செயற்குழு, பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது: சென்னையில் பிரேமலதா பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்று பிரேமலதா கூறினார். தேமுதிகவின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொருளாளர் பிரேமலதா தலைமை வகித்தார். கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு பிரேமலதா அளித்த பேட்டி: நிர்வாகிகள் கூட்டத்தில் நடப்பதை கட்சியின் தலைவர் விஜயகாந்த்திடம் சொல்வோம். செயற்குழு, பொதுக்குழு விரைவில் கூட்டப்பட்டு தேமுதிகவின் அடுத்தகட்ட நிலை என்பதை அறிவிப்போம். இந்த நிமிடம் வரைக்கும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு எந்த கூட்டணி, என்ன நிலைப்பாடு என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி திமுக, அதிமுக, தேமுதிகதான். தேமுதிகவின் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசு. அதில்தான் நாங்கள் போட்டியிடுவோம்.

விஜயகாந்தை பொறுத்தவரை அனைத்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு, அதிகபட்சமாக என்ன கருத்து இருக்கிறது என்பதை பார்த்து செவிசாய்ப்பார். எங்களுக்கான தொகுதிகளை நாங்கள் நிச்சயமாக கேட்போம். தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். அதுதான் நிலையானது, இறுதியானது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் அறிவித்த பின்னர் அதில் எந்த கருத்தும் நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>