×

5 நாள் பொங்கல் விடுமுறை எதிரொலி ரூ.750 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு: அதிகாரிகள் தீவிரம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதேபோல், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த வருவாய் இரட்டிப்பாகும். அந்தவகையில், 2021 புத்தாண்டு பண்டிகைக்கு ரூ.297 கோடி டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. அதன்படி, வரும் 14ம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனால், டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்ததை விட மதுவிற்பனை அதிகரிக்கும். எனவே, பொங்கல் பண்டிகைக்கு மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, ரூ.2 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் ரூ.10 லட்சம் வரையிலான மதுபானங்களும், ரூ.4 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் ரூ.18 லட்சம் வரையிலான மதுபானங்களை இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட மேலாளர்கள் மேற்பார்வையில் கடை ஊழியர்கள் மதுபானங்களை குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, 5 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.750 கோடி வரையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tasmag aims to sell liquor worth Rs 750 crore in the wake of 5-day Pongal holiday: Officials intensify
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...