×

கொள்கையா? கூட்டணியா? ராமதாசுடன் 2 அமைச்சர்கள் சந்திப்பு: அதிமுகவுக்கு திடீர் நிபந்தனை

திண்டிவனம்: வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்தாலும் முதல்வர் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் போராட்டங்களை நடத்தி வருபவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நேற்று மதியம் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போதுதான் சட்டமன்ற தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணி தொடரும் என்று கூறியதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.25 மணிக்கு காரில் வந்த அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் ராமதாசை சந்தித்து பேசினர். அமைச்சர்கள் இருவரும் பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்து காரில் புறப்பட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்க முயன்றபோது அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றனர். இது தொடர்பாக பாமக தரப்பில் கேட்டபோது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அது சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பானது என்றும் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்து தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளி நபர்களை சந்திப்பதை தவிர்த்து தனிமையில் இருந்து வருகிறார். அவரது உதவியாளர் உள்பட கட்சி நிர்வாகிகள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதிமுவை சேர்ந்த அமைச்சர்கள் மட்டும் இரண்டாவது முறையாக சந்தித்துச் சென்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி அமைச்சர்கள் தங்கமணி மற்றும் அன்பழகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் சுமார் 15 நிமிடங்கள் ரகசியமாக சந்தித்து பேசிவிட்டு சென்றனர்.

இப்போது அன்பழகனுக்குப் பதில், வேலுமணி தற்போது பேச்சுவார்த்தையில் சேர்ந்து கொண்டுள்ளார். நேற்றைய சந்திப்பின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் பாமக புதுவை மாநில அமைப்பாளர் முன்னாள் எம்பி தன்ராஜ் மட்டும் உடனிருந்தார். இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நேற்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கலுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.

அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார். இது குறித்து பாமக நிர்வாகிகள் கூறும்போது, வன்னியர்களுக்கு தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம். இல்லாவிட்டால், தனித்துப் போட்டியிடுவோம். இந்த சூழ்நிலையில் நாங்கள் தனித்து போட்டியிட்டாலே 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

அதனால் எங்களுடைய கூட்டணிதான் அதிமுகவுக்கு தேவை. அவர்களது ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. இதனால்தான் நாங்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் நிறுவனர் 20 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆணை பெறாமல் கூட்டணியில் சேர மாட்டார் என்று தெரிவித்தனர். 20% இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் கூட்டணியில் இருந்து பாமக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20% இட ஒதுக்கீடு வழங்கினால், மற்ற சமூகத்தினரின் வாக்கு கிடைக்காது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.

* ராமதாசை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.
* ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தமிழக அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும்
வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை, என்று கூறியுள்ளார்.

Tags : ministers ,Alliance ,Ramadas ,AIADMK , Policy? Alliance? Meeting of 2 Ministers with Ramadas: Sudden Condition to Atimu
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி