×

அரசியலுக்கு வர நிர்பந்திக்கும் ரசிகர்கள் என்னை வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்: ரஜினிகாந்த் உருக்கம்

சென்னை: அரசியலுக்கு வரச்சொல்லி போராட்டம் நடத்தி, என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். நடிகர் ரஜினி, கடந்த ஆண்டு நவம்பரில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது தனது உடல்நிலை குறித்து அவர்களிடம் விளக்கினார். பின்னர் அரசியல் கட்சி தொடங்கலாமா என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஜனவரியில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.

இதையடுத்து ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், படக்குழுவினருடன் ஐதராபாத்துக்கு சென்றார். அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக, ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் குணமாகி, சென்னை திரும்பினார். அதன் பின்னர் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘எனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரத்த அழுத்தம் மாறுபாடு ஏற்படக்கூடாது. இப்போது எனக்கு அந்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது கடவுள் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக பார்க்கிறேன். என்னை நம்பி அரசியலுக்கு வரும் ரசிகர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு நான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன்’ என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரை நிர்ப்பந்திக்கும் விதமாக ரசிகர்கள் சிலர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.

தயவுகூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். தன்னுடைய உடல்நிலை குறித்து ரஜினி தெளிவாக கூறிய பின்னரும் ரசிகர்கள் சிலருடைய தூண்டுதலின்பேரில் போராட்டம் நடத்தி வருவது அவரை வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Fans ,Rajinikanth , Fans who force me to come to politics do not torment me: Rajinikanth melts
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...