சோனியா, ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங்குக்கு போல் பாஜவின் 2 மாஜி முதல்வர், முன்னாள் ஆளுநரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்: மகாராஷ்டிரா அரசு அதிரடி நடவடிக்கை

மும்பை: சோனியா, ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் போன்றோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு குறைக்கப்பட்டது போல் பாஜவின் 2 மாஜி முதல்வர், முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், உத்தரபிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக், மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (எம்.என்.எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, பாஜக மாநில பிரிவுத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பட்னாவிசுக்கு இப்போது வழங்கப்படும் ‘இசட்-பிளஸ்’ பாதுகாப்புக்கு பதிலாக ‘எஸ்கார்ட் உடன் ஒய்-பிளஸ்’ வகை பாதுகாப்பு வழங்கப்படும். அவரது மனைவி அமிர்தா, மகள் திவிஜா ஆகியோருக்கு ‘ஒய்-பிளஸ் வித் எஸ்கார்ட்’ பிரிவில் இருந்து ‘எக்ஸ்’ வகை பாதுகாப்பு வழங்கப்படும். பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இரண்டு பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும், 11 பேரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டும் உள்ளது. 16 பேரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது, அதேநேரத்தில் 13 பேருக்கு புதியதாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில பிரிவு செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யாய் கூறுகையில், ‘பழிவாங்கும் அரசியலின் கீழ் முன்னாள் முதல்வர் மற்றும் பாஜக தலைவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது’ என்றார். இவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ‘தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு அவர்கள் மீதான அச்சுறுத்தல் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. இதில், எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை’ என்றார். இதற்கிடையில், காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்ததற்கான காரணத்தை அவர்கள் (பாஜக) கூற வேண்டும்’ என்றார்.

Related Stories:

>