×

திருமூர்த்தி அணையில் இருந்து 3ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

உடுமலை: திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் உடுமலை நகராட்சி உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பிஏபி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கெனவே, 2 மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், 3ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று இன்று (ஜன.11) முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயகார்த்திகேயன், முன்னாள் எம்பி., மகேந்திரன், எம்எல்ஏக்கள் தனியரசு, நடராஜன், கந்தசாமி, தலைமை செயற்பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் ராஜூ, பழனிவேல், உதவி செயற் பொறியாளர்கள் காஞ்சிதுரை, புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் சண்முகம், ஜெயக்குமார், செந்தில், தீனதயாளன், அதிமுக நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, புஷ்பராஜ், முரளி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 912 கனஅடியாக அதிகரிக்கப்படும். இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் வட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் 94,362 ஏக்கர் நிலம் பயனடையும். உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 9500 மில்லியன் கனஅடி திறந்துவிடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,’’ என்றனர்.



Tags : Opening ,Thirumurthy Dam , Opening of water from Thirumurthy Dam for 3rd Zone Irrigation
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு