மோடியின் எம்பி தொகுதிக்கு உட்பட்ட பாஜக மாஜி எம்எல்ஏவுக்கு ‘பளார்’: மாணவியிடம் சில்மிஷம் செய்ததால் அதிரடி

வாரணாசி: பிரதமர் மோடியின் எம்பி தொகுதிக்கு உட்பட்ட பாஜக மாஜி எம்எல்ஏ மாணவியிடம் சில்மிஷம் செய்ததால் அவரை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அறைந்தனர். பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு உட்பட்ட  சிராகான் சட்டமன்ற தொகுதியின் பாஜக முன்னாள் எம்எல்ஏ மாயசங்கர் பதக். இவர் வாரணாசி பகுதியில் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து அந்த மாணவியின் குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினம் கல்லூரிக்கு வந்தனர். அப்போது தனது அறையில் அமர்ந்திருந்த மாயசங்கர் பதக்கை குடும்பத்தினர் சந்தித்தனர்.

 

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு அலட்சியமாக பதில் கூறியதால் ஆவேசமடைந்த குடும்பத்தினர் அவரை தாக்க முயன்றனர். அவர்களின் ஒருவர், மாயசங்கர் பதக்கை ‘பளார்’ என்று அறைந்தார். இவ்வாறு அறைந்ததில் அவர் அணிந்திருந்த தொப்பி பறந்தது. அதன்பின், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், மாணவியின் குடும்ப உறுப்பினர்கள், மாயசங்கர் பதக்கை தாக்குவதும், தொடர்ந்து அவர் தனது காதுகளை பிடித்து மன்னிப்பு கேட்கும் சம்பவமும் அதில் பதிவாகி உள்ளது.

இந்த வைரல் வீடியோ குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி பிந்திரா அபிஷேக்  குமார் பாண்டே தெரிவித்தார். இரு தரப்பிலிருந்தும் யாரும் போலீசில் புகார்  அளிக்கவில்லை என்றாலும் கூட, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>