×

விளைச்சல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் குமரியில் தேங்காய் விலை சற்று குறைந்தது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்னை விவசாயமும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய்க்கு பிற மாவட்டம், கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பு உண்டு. காலநிலை மாற்றம், நோய்தொற்றால் தென்னையில் தேங்காய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்திற்கு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேங்காய் இறக்குமதி ெசய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் விவசாயிகளிடம் இருந்து ரூ.47க்கும், தேங்காய் மட்டையோடு (கதம்பை) ஒரு தேங்காய் ரூ.21க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. வியாபாரிகள் ஒரு கிலோ தேங்காய் ரூ.50 முதல் ரூ.55க்கு விற்பனை செய்தனர்.

தற்போது குமரி மாவட்டத்தில் தென்னையில் தேங்காய் உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தை மாதம் முதல் தென்னையில் விளைச்சல் அதிக அளவு இருக்கும். இந்த விளைச்சல் வருகிற 6 மாதகாலம் தொடரும். உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதன்படி தற்போது தேங்காய் சற்று விலை குறைந்து உள்ளது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தேங்காய் ரூ.37க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் ஒரு கிலோ தேங்காய் ரூ.40 முதல் ரூ.44 வரைக்கும் விற்பனை செய்கின்றனர். இது குறித்து தென்னை விவசாயி ஒருவர் கூறியதாவது: தென்னை விவசாயத்தில் 6 மாத காலம் நல்வெட்டும், 6 மாதகாலம் சில்வெட்டும் என்று தேங்காய் உற்பத்தி இருக்கும். சில்வெட்டு ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை இருக்கும்.

இந்த காலகட்டத்தில் தென்னையில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். அப்போது தேங்காய் விலை அதிகமாக இருக்கும். தை மாதம் முதல் நல்வெட்டு தொடங்கும். இந்த காலத்தில் தென்னையில் தேங்காய் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தேங்காய் விலை குறையும். தற்போது குமரி மாவட்டத்தில் தென்னைகள் பெரும்பாலும் நோய் தாக்கத்தால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த நல்வெட்டில் ஒரு தென்னையில் சுமார் 30 தேங்காய் கிடைத்தால், தற்போது உள்ள நிலையில் சுமார் 10 முதல் 15க்குள் கிடைக்கும். இதனால் அதிக தேங்காய் கிடைப்பது சந்தேகம்தான். இதன் காரணமாக விலை அதிக அளவு குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.


Tags : Kumari , Coconut prices in Kumari fell slightly as yields began to increase
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...