தொடர் கொள்ளைகள் - குற்றவாளிகள் கைது இல்லை; குமரியில் வேகம் காட்டாத தனிப்படைகள்: பணி பாதுகாப்பு இல்லை என வருத்தம்

நாகர்கோவில்: குற்ற சம்பவங்களில் துப்பு துலக்குவது, குற்றவாளிகளை கைது செய்வது போன்ற செயல் திறன்கள் குறைந்து குமரி மாவட்ட காவல்துறை திணறி வருகிறது. குமரி மாவட்டம் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த காலம் உண்டு. 1990 களில் ரவுடிகள் லிங்கம் மற்றும் பிரபு என இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல்களும், கொலைகளும் அரங்கேறிய கால கட்டம்.  லிங்கம் கோஷ்டியினர் பிரபுவை தீர்த்து கட்டினர். இதனால் பிரபு கோஷ்டி லிங்கத்தை பழி வாங்க திட்டமிட்டு 1996 ல் நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து லிங்கத்தை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. அவரது தலையை பஸ் நிலையத்தில் வீசி விட்டு சென்றனர்.

இவ்வாறு பல கொடூர கொலைகள் அரங்கேறிய கால கட்டம் உண்டு. அப்போது இருந்த போலீஸ் அதிகாரிகள் சிலரும் துடிப்புடன் செயல்பட்டு, ரவுடிகளை வேட்டையாடினர். எண்கவுண்டர்களும் அரங்கேறின. இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தன. அந்த வகையில் சப் இன்ஸ்பெக்டராக இருந்து டி.எஸ்.பி. வரை பதவி உயர்வு பெற்ற சந்திரபால், பெயர்  இன்னும் குமரி காவல்துறையில் நிலைத்து நிற்கிறது. அது போன்ற துடிப்புமிக்க காவல்துறை அதிகாரிகள் பணியாற்றிய குமரி மாவட்ட காவல்துறை மெல்ல, மெல்ல தனது தனித்தன்மையை இழந்து வருகிறது.

குற்ற சம்பவங்களில் விசாரணை மேற்கொள்ளும் திறமைமிக்க  இன்ஸ்பெக்டர்களோ, சப் இன்ஸ்பெக்டர்களோ இல்லாமல் போய் விட்டனரோ என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு கொள்ளை சம்பவங்கள் தொடர் கதைகளாகி வருகின்றன.

ரவுடிகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் கூட, ெகாள்ளையர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடிய வில்லை. கொள்ளை வழக்குகளில் யார்? குற்றவாளிகள் என்பதற்கான தடயங்களோ, தகவல்களோ இல்லை. காவல்துறை செயல்பாடு இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை. பிரச்சினை என வரும் போது சம்பந்தப்பட்ட போலீசை மட்டும் பலி கடா ஆக்குதல், சஸ்பெண்ட், டிஸ்மிஸ், ஓய்வு காலத்தில் பென்சன் நிறுத்தம் என பல்வேறு காரணங்களை காவல்துறையினர் கூறுகிறார்கள். இதனால் தனிப்படை போலீசாரின் வேகம் குறைந்து விட்டது. தனிப்படையில் உள்ள போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை. முன்பு போல் குற்றவாளிகளை பிடித்து வைத்து விசாரணை நடத்தி, நகைகளை மீட்கும் நடவடிக்கைகள் கிடையாது. அவ்வாறு  சந்தேகப்படும் நபர்களை பிடித்து வைத்து விசாரித்தால் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக காவல்துறை கூறுகிறார்கள்.

தனிப்படையில் உள்ள அதிகாரிகள் மீது தனி நபர் வழக்கு, மனித உரிமை ஆணையத்தில் புகார் என பல்வேறு இடையூறுகளை குற்றவாளிகள் தரப்பில் இருந்து கொடுக்கிறார்கள். இதனால் தனிப்படையினர் இப்போது வேகம் குறைந்த நிலையில் செயல்படுகிறார்கள். மாதம் பிறந்தால் சம்பளம் என்ற நிலை உள்ளது. இதில் வேகமாக செயல்பட்டு வழக்குகள், துறை ரீதியான தண்டனைகள் என தனிப்பட்ட பிரச்சினைகளை ஏன்? சந்திக்க வேண்டும் என்பது தனிப்படை போலீசாரின் கருத்தாக உள்ளது. இதனால் போலீசார் மவுனமாகவே பொழுதை கழிக்க நினைக்கிறார்கள். போலீசாரின் இந்த மவுனம், தற்போது குற்றவாளிகளுக்கு சாதகமாகி உள்ளது.

தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. ரவுடியிசமும் மெல்ல, மெல்ல தலை தூக்க தொடங்கி உள்ளது. முன்பெல்லாம் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று கூட குற்றவாளிகளை தனிப்படை எடுத்து வந்தது. ஆனால் இப்போது அது போன்று இல்லாமல் முடங்கி கிடக்கிறார்கள். தனிப்படையினரை வேகப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தால், கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

கஞ்சா, புகையிலை விற்பனை குறைந்தது

எஸ்.பி. பத்ரிநாராயணன் பொறுப்பேற்ற பின், மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ச்சியாக கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதே போல் புகையிலை மற்றும் திருட்டு மது விற்பனையிலும் தினமும் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஆனால் மற்ற சம்பவங்களில் காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே திருட்டு வழக்குகளில் விசாரணை நடத்தும் நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories:

>