கன்னடம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தமிழக நெடுஞ்சாலை பெயர்பலகையை அடித்து உடைத்த வாட்டாள் நாகராஜ்

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கன்னடத்தில் எழுதவில்லை எனக்கூறி, தமிழக நெடுஞ்சாலைத்துறை பெயர்பலகையை வாட்டாள் நாகராஜ் உடைத்து எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் ராமாபுரம் என்ற இடத்தில் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மாநில எல்லை முடிவு என எழுதப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னட அலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் நேற்று மாலை தமிழக-கர்நாடக எல்லைக்கு வந்தனர். அவர்கள் நெடுஞ்சாலைத்துறையில் பெயர் பலகையில் கன்னட மொழியில் எழுதப்படவில்லை எனக்கூறி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெயர் பலகைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

அதில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களின் ஸ்டிக்கர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழக அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகையை வாட்டாள் நாகராஜ் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>