ஜனவரி 25 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும்..! யாரும் விடுபட்டுவிடாமல் கிடைக்க நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஜனவரி 25-ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜன. 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதிக்குள் பொங்கல் பரிசை விநியோகிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விடுபட்டவர்கள் 13-ம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. யாரும் விடுபட்டுவிடாமல் பொங்கல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது ஜன.25 வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் மக்கள் கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 சேர்த்து வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்த பரிசு தொகுப்பு திட்டத்தை கடந்த மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஜனவரி 4-ந்தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் தொடங்கும் என்றும், இதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில நாட்களாக டோக்கன்கள் வினியோகிக்கும் பணி நடந்து வந்தது. பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறக்கூடிய பொருட்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை மூலம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி ஜனவரி 4-ந்தேதி முதல் தொடங்கியது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் காலை, மாலை என தலா 100 பேர் வீதம் 2 ‘ஷிப்டு’களாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, திராட்சை 20 கிராம், முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், முழு கரும்பு மற்றும் ரூ.2 ஆயிரத்து 500-ம் அடங்கிய பொங்கல் பரிசு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஜன. 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதிக்குள் பொங்கல் பரிசை விநியோகிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொருட்களை பெற முடியாதவர்கள் வருகிற 19-ந்தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 25-ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. யாரும் விடுபட்டுவிடாமல் பொங்கல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது ஜன.25 வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>