×

பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்

புதுடெல்லி: வரும் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அல்வா கிண்டும் நிகழ்ச்சியும், பிரிண்ட் ஆவணம் வழங்கும் முறையும் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 2021 - 22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி பட்ஜெட் உரைகள் தயாரிப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. அன்றைய தினம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அல்வா’ கிண்டி அவற்றை ஊழியர்களுக்கு வழங்கி பட்ஜெட் பணிகளை தொடங்கி வைப்பார்.

மத்திய நிதித்துறை அமைச்சகம் அமைந்திருக்கும் நார்த் ப்ளாக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ‘அல்வா’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அல்வா கிண்டி விட்டால், பட்ஜெட் பணிகள் தொடங்கி விட்டதாக என்று அர்த்தம். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணி நார்த் ப்ளாக்கில் 10 நாட்களுக்கு நடைபெறும். இதில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு விதிக்கப்படும்.

வரும் பிப். 1ம் தேதி பட்ஜெட் உரை வாசித்து முடித்த பின்னர்தான், நார்த் பிளாக்கிலிருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பட்ஜெட் ரகசியத்தை காக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களை கவுரவப்படுத்தும் நோக்கிலும், ‘அல்வா’ கிண்டி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சி இருக்காது என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பட்ஜெட் ஆவணங்களை அச்சிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் முறைைய நிதியமைச்சகம் ரத்து செய்யவுள்ளது.

காகிதமில்லாத முறையை பின்பற்ற உள்ளதாகவும், அதற்காக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவணங்களை அச்சிடுவதற்காக நார்த் பிளாக்கில் பணியாளர்கள் குறைந்தது 10 நாட்கள் தங்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Alva ,Federal Ministry of Finance , Feb. Federal budget filed on 1st; ‘Alva’ show, no print document: Federal Ministry of Information
× RELATED தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர்: பிரதமர் மோடி பேச்சு