திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம்..! உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்

மதுரை: திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  நீதிமன்ற உத்தரவை ஏற்று திரையரங்குகளில் 100% அனுமதி அளித்த அரசாணையை திரும்ப பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. பொங்கல் ரிலீஸுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் தயாராக இருக்கின்றன. இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நிலையில், ரசிகர்களுக்காக அரசு உற்சாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சுகாதாரத்துறை தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் தற்போது இருக்கும் 50% பார்வையாளர்கள் நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதிக்கு எதிராக வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவது போதாது; கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திரையரங்குகளில் மீண்டும் 50% அனுமதி அளித்த அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், திரையரங்குகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளி மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும், இது குறித்து திரையரங்குகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>