×

லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு செவிசாய்த்து, வேளாண் சட்டங்கள் செயல்படுத்துவதை நிறுத்துக : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாயிகள் போராடிவரும் நிலையில் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது என்று மத்திய அரசு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். விவசாய சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் பிடித்தால் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும். வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா?. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என்றால் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம்.என்ன ஆனாலும் சரி 3 சட்டங்களையும் செயல்படுத்தியே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்?.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை. விவசாயிகள் தொடர்ந்து போராடலாம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.சிலர் தற்கொலை செய்கின்றனர்; வயதானோர், பெண்கள் போராடுகின்றனர்; என்னதான் நடக்கிறது?.மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது.சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?.வேளாண் சட்டங்கள் நல்லது என்று இதுவரை ஒருவர் கூட மனுத் தாக்கல் செய்யவில்லை, என்று காட்டமாக தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 3 புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திமுக முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய இடையீடு, அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளைச் சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது.

பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைக் கருத்திற்கொண்டும், இலட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குச் செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : millions ,MK Stalin , MK Stalin, Request
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...