பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை எவ்வாறு தடுக்க முடியும்? : உச்சநீதிமன்றம்

டெல்லி : டெல்லியில் இந்த ஆண்டில் எதிர்வரும் காற்று மாசுமை கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள திட்டம் மற்றும் அதன் நடவடிக்கை என்ன என்பது குறித்த முழு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு இறுதியில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து காற்று மாசு மிகவும் அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்தும் விவதாமக முதலாவதாக ஓய்வு நீதிபதி மதன் பி லோகூர் தலைமையில் தனிநபர் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள அதன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் தானா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து டெல்லி காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு தரப்பில் அவசர சிறப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் அதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1கோடி அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு, உடனடியாக சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதையடுத்து காற்று மாசு தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப் படுத்தப்பட்ட அவசர சிறப்பு சட்டத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, அது கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து எந்த அளவிற்கு காற்று மாசு கட்டுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்றின் தரம் தற்போது எந்த நிலையில் உள்ளது போன்ற முழு விவரங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை  இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த மாதம் 14ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் கடந்த காலத்தை விட்டுவிடுவோம். ஆனால் தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் 2021ம் ஆண்டில் எதிர்வரும் மாதங்களில் காற்று மாசு அதிகரிக்காமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?, அதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டம் எத்தகையானது? குறிப்பாக காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள அதன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை எவ்வாறு தடுக்க முடியும்? அதில் விவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்குமா? ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய முழு அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை ஒப்புக்கொண்ட மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, அடுத்த விவசாரணைக்குள் மேற்கண்ட விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதாக நீதிபதிகள் முன்னிலையில் உறுதியளித்தார். இதையடுத்து வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>