×

பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கும் பணிகள் 25சதவீதம் நிறைவு-மாநகராட்சி ஆணையாளர் தகவல்

ஈரோடு :  ஈரோடு பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, 25சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது, என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாநகரில் பழமையான மழை நீர் வடிகாலாக பெரும்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடை திண்டலில் இருந்து காவிரி ஆறு வரை 12 கி.மீ தொலைவிற்கு மாநகரின் குறுக்கே ஓடுகிறது.

ஓடையில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை நீரும் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகளின் கழிவு நீரும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு ஆங்காங்கே சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டு வந்தது.  இந்நிலையில், பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி சார்பில் ரூ.183.89 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: காவிரி ஆற்றில் மாநகராட்சியின் கழிவு நீர் கலக்காத வகையில், பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்க ரூ.183.89கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக திண்டல், வில்லரசம்பட்டியில் பெரும்பள்ளம் ஓடையில் 15 ஆயிரம் குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் கலந்து வந்த நிலையில், அந்த குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலம், பெரும்பள்ளம் ஓடை வழியாக காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து வந்த 100 லட்சம் லிட்டர் சாக்கடை கழிவு நீரை, தற்போது சுத்திகரிப்பு செய்து காவிரி ஆற்றில் விடுகிறோம்.

பெரும்பள்ளம் ஓடைக்கு சொந்தமான மாநகராட்சி இடத்தில் பசுமை பூங்காக்களும், வாக்கிங் டிராக்அமைக்கப்பட்டு வருகிறது. இது, அகமதாபாத், மதுரை வைகை ஆறு, சேலம் மணிமுத்தாறு போன்ற முடிவுற்ற திட்டப்பணிகளை மையமாக கொண்டும், அதை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் பெரும்பள்ளம் ஓடை நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் 25சதவீதமும், ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளில் 5சதவீதம் என 30சதவீதம் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த 1,300 வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில், 250 ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் பெற்று தந்துள்ளோம்.

இதில், ஒவ்வொரு பயனாளிகளும் செலுத்த வேண்டிய தொகையை ரூ.1லட்சம் தொகையை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிசை மாற்று வாரியத்திற்கு செலுத்தி விட்டோம். மீதமுள்ளவர்களில் பட்டியல் தயாரித்து அவர்களுக்கும் விரைவில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீட்டிற்கு ரூ.1லட்சம் பணம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : completion ,Commissioner , Erode: Erode Perumpallam stream rehabilitation work has been resumed and 25 percent of the work has been completed, said the Corporation Commissioner
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா