×

ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: விஹாரி - அஸ்வின் இணை அபார தடுப்பாட்டம்! இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது..!

சிட்னி: விஹாரி - அஸ்வின் இணையின் அபார தடுப்பாட்டத்தால்  3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடந்தது. தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும், 94 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றைய 4-வது நாளில் ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 81 ரன்களையும், கேமரூன் கிரீன் 84 ரன்களையும், லாபுசாக்னே 73 ரன்களையும் குவித்தனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடித்து 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி தனது 4-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து ஆட்டமிழந்தார். ஷிப்மான் கில்லும் 31 ரன்களில் வெளியேற அடுத்து வந்த புஜாரா 9 ரன்களையும், ரஹானே 4 ரன்களையும் எடுத்திருந்தபோது ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை சேர்த்துள்ளது.ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி, 5-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்பத்திலேயே கேப்டன் ரஹானே (4) ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், அதிரடியாக ஆடி ரன்னை வேகமாக உயர்த்தினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சிதறிடித்த பண்ட், சதம் அடிக்கும் வேலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியில் உறைய வைத்தார். இதனையடுத்து, புஜாரா 77 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், அஸ்வின் மற்றும் விஹாரி ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இவர்களின் அபார தடுப்பாட்டத்தை கண்டு ஆஸ்திரேலியா மிரண்டது. இறுதியில்  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  டிராவில் முடிந்தது.

Tags : Test match ,India , India, Australia, Test match, draw
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...