×

கண்டு கொள்ளாத அதிகாரிகளால் சிவகாசியில் பூட்டியே கிடக்கும் நூலகங்கள்-போட்டி தேர்வுக்கு தயாராக முடியாமல் மாணவர்கள் பரிதவிப்பு

சிவகாசி : சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பாலான பகுதியில் நூலகங்கள் பூட்டிக்கிடப்பதால் போட்டிதேர்வுக்கு தயாராகும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நூலகங்கள் கட்டப்பட்டன.

பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இவை சில இடங்களில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளன. அவற்றுக்கு இதுவரை முழுமையான புத்தகங்கள் வழங்கப்பட்டும் செயல்படவில்லை. இதனால் இந்த நூலகங்கள் எப்போதும் பூட்டியே கிடக்கின்றன.

இந்த நூலகங்களுக்கு ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரை நூலகராக நியமித்து, ஊராட்சி மூலம் மாதம் ரூ.1,000 சம்பளம் வழங்கலாம் என அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், மாதம் ரூ.1,000 சம்பளத்தை கூட வழங்க தங்களிடம் நிதி இல்லை என ஊராட்சிகள் கை விரித்து விட்டன.இதனால் ஓய்வு பெற்ற நூலகர்களாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள் பணிக்கு வருவதை நிறுத்தி விட்டனர். இதனால் நூலகங்கள் மூடப்பட்டு விட்டன.

பல ஆண்டுகளாக நூலகங்கள் மூடப்பட்டும் ஊராட்சி நிர்வாகங்கள் இவற்றை கண்டு கொள்ளவில்லை. மாணவர்களின் அறிவை வளர்க்கும் பொருட்டு கட்டப்பட்ட நூலகங்கள் சிவகாசி பகுதியில் எதற்கும் பயனில்லாமல் உள்ளன. இதனால் இதற்காக செலவிப்பட்ட அரசு நிதி வீணாகிறது. பல கிராமங்களில் உள்ள நூலகங்கள் சேதமடைந்தும் மாற்று பணிகளுக்கும் பயன்படுத்தப்ட்டு வருகின்றன.ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களுக்கு பல போட்டித்தேர்வுகளை மத்திய, மாநில தேர்வாணையங்கள் நடத்தி வருகின்றன.

இவற்றிற்கு தயாராகி வரும் ஏழை மாணவர்கள் பொது அறிவு, நாட்டு நடப்புகளை அறிந்துக் கொள்ள நூலகங்களை நாடி வருகின்றனர். ஆனால், ஊராட்சிகளில் உள்ள நூலங்கள் திறக்கப்படுவதே இல்லை. குறிப்பாக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட நூலகங்களின் சாவி, ஊராட்சி தலைவர்களிடம் உள்ளன. பல தலைவர்கள் நூலங்களை திறப்பதே இல்லை.இதனால் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கப்பட்ட பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தூசி படிந்து கிடக்கின்றன.

இதனால் தகுதியை வளர்த்துக் கொள்ள இயலாமல், பல திறமையான மாணவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்படுகிறது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும்படி நூலகங்கள் அனைத்தும் திறந்து வைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Libraries ,Sivakasi ,competition , Sivakasi: Libraries are locked in most parts of Sivakasi Panchayat Union and the poor are preparing for the competition.
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து