×

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹேரன்பாலுக்கு 2 நாள் சிபிஐ காவல்! : கோவை மகளிர் நீதிமன்றம்..!!

கோவை: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரில் ஹேரன்பாலுக்கு 2 நாள் சிபிஐ காவல் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய  5 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 5ம் தேதி பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கின்ற மைக் பாபு ஆகிய மூவரை கைது செய்திருந்தது. இவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மூவரின் ஹேரன்பாலை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ சார்பில் கோவை மகிளா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 5 நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 நாட்கள் அனுமதி அளித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், மைக் பாபு ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளதாகவும், ஹேரன்பாலை மட்டும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Tags : Pollachi ,CBI ,Coimbatore Women's Court , Pollachi Collective Sexual Abuse, Hornball, CBI custody
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!