தேர்தல் பிரச்சாரத்திற்காக விரைவில் தமிழகம் வருகிறார் ராகுல்!: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தகவல்..!!

சென்னை: இம்மாத கடைசியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனவரி 18ம் தேதி காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த மாதம் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு தமிழகம் வரவுள்ளதாகவும் முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அவர் தமிழகத்திற்கு வர உள்ளார். அவர் பரப்புரை மேற்கொள்ளும் தேதிகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழக மக்கள் மீது ராகுல்காந்தி எப்போதும் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளார். இதனை பல்வேறு சூழ்நிலைகளில் அவர் வெளிப்படுத்தி உள்ளார் என குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முதலமைச்சர் மீதான ஊழல் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சி.பி.ஐ. இதில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அழகிரி குறிப்பிட்டார்.

Related Stories:

>