×

தொழிலதிபரை கடத்தி ரூ.21 லட்சம் பறிப்பு இந்துமகாசபை நிர்வாகி உட்பட 9 பேர் கும்பல் அதிரடி கைது

* சென்னையை சேர்ந்த 3 பேர் மீட்பு
* இரிடியம் இருப்பதாக மோசடி அம்பலம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 3 பேரை கடத்தி வைத்து, தொழிலதிபர் மனைவியிடம் ரூ.21 லட்சம் பறித்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன். தொழிலதிபரான இவர் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி வெளிநாட்டிற்கு விற்பனை செய்பவர். ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த ரகுமான் என்பவர் சில தினங்களுக்கு முன்பு மோகனை தொடர்பு கொண்டு தன்னிடம் இரிடியம் உள்ளதாகவும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் பகுதிக்கு வருமாறும் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 7ம் தேதி மோகன், அவரது கார் டிரைவர் சுரேஷ், கொல்கத்தாவைச் சேர்ந்த ஜாய், ஆகியோர் காரில் அங்கு சென்றனர். அப்போது ஒரு காரில் போலீஸ் வேடத்தில் வந்த 6 பேர் கும்பல் மூன்று பேரையும் தாக்கி இரிடியம் சோதிப்பதற்கான பொருட்கள் போன்ற வேதிப்பொருட்களை வைத்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்து, நீங்கள் தான் இரிடியம் மோசடி கும்பல் என போலீசாரை நம்பவைத்து மாட்டி விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.

பின்னர் சென்னையில் உள்ள மோகனின் மனைவி வித்யாவை போனில் தொடர்பு கொண்டு உங்களது கணவரை கடத்தியுள்ளோம். ரூ.5 கோடி தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். பின்னர் தர்மபுரி ரமேஷ் வங்கி கணக்கில் ரூ.35 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அவர் ரூ.21 லட்சத்ைத அந்த கணக்கில் செலுத்தினார். இருந்தும் கணவரை விடுவிக்காததால், கடந்த 9ம் தேதி சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்றுமுன்தினம் விவசாய தோட்டத்தில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது 6 பேர் தப்பி ஓடினர். 9 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து மோகன், சுரேஷ், ஜாய் ஆகியோரை மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.9 லட்சம், 16 பவுன் நகைகள், அவர்கள் பயன்படுத்திய 4 செல்போன்கள், 3 கார்கள் மற்றும் இரிடியம் உலோகத்தை பரிசோதிக்க பயன்படும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பவானிசாகர் அருகே எரங்காட்டூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (45), பிரபு (எ) அருண்குமார் (30), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம்  ரத்னசபாபதி (29), நேரு நகர் கோபாலகிருஷ்ணன் (33), செண்பகபுதூர் பாபு (எ) ஆனந்தபாபு (36), அந்தியூர் பர்கூர் சண்முகம் (45), கோவை உப்பிலிபாளையம் லைஜூ(எ) ஜீவா(30), கோவை பீளமேடு  சேதுபதி (எ) சுப்பிரமணி (27), ராஜேஷ்குமார் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் லைஜூ (எ) ஜீவா இந்து மகாசபையின் கோவை மாவட்ட அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பியோடிய ரகுமான், தர்மபுரி ரமேஷ் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : kidnapping businessman , 9 arrested for kidnapping businessman and extorting Rs 21 lakh
× RELATED தொழிலதிபரை கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது