×

ஆஸி. 2வது இன்னிங்சில் 312/6 டிக்ளேர் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு: இன்று கடைசி நாள் விறுவிறு...

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், 407 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்துள்ளது. எஸ்சிஜி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன், இந்தியா 244 ரன் எடுத்து ஆட்டமிழந்தன. 94 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்திருந்தது. லாபுஷேன் 47, ஸ்மித் 29 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்தது. லாபுஷேன் 73 ரன் (118 பந்து, 9 பவுண்டரி) விளாசி சைனி பந்துவீச்சில் மாற்று விக்கெட் கீப்பர் சாஹா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மேத்யூ வேடு 4 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஸ்மித்துடன் இளம் வீரர் கேமரான் கிரீன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, ஆஸி. ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஸ்மித் 81 ரன் (167 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் எல்பிடபுள்யு ஆனார்.

நடப்பு தொடரின் முதல் 4 இன்னிங்சில் 10 ரன் மட்டுமே எடுத்திருந்த இவர், சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 131 ரன் மற்றும் 2வது இன்னிங்சில் 81 ரன் விளாசி பார்முக்கு திரும்பியுள்ளார். ஸ்மித் வெளியேறியதும், கிரீனுடன் கேப்டன் டிம் பெய்ன் இணைந்தார். துடிப்புடன் விளையாடிய இருவரும் 6வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தனர். கிரீன் 84 ரன் (132 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பூம்ரா வேகத்தில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. பெய்ன் 39 ரன்னுடன் (52 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அஷ்வின், சைனி தலா 2, சிராஜ், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 407 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் ஷர்மா - ஷுப்மான் கில் இணை முதல் விக்கெட்டுக்கு 22 ஓவரில் 71 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. கில் 31 ரன் எடுத்து (64 பந்து, 4 பவுண்டரி) ஹேசல்வுட் வேகத்தில் பெய்ன் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெஸ்ட் போட்டிகளில் தனது 11வது அரை சதத்தை பதிவு செய்த ரோகித், கம்மின்ஸ் பவுன்சரை சிக்சருக்கு தூக்க முயன்று எல்லைக் கோட்டருகே ஸ்டார்க் வசம் பிடிபட்டார்.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்துள்ளது. புஜாரா 9 ரன், கேப்டன் ரகானே 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க வெற்றிக்கு இன்னும் 309 ரன் தேவை என்ற நிலையில், இந்திய அணி இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. தொடரில் முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.


Tags : Aussie ,innings ,India , Aussie. 312/6 declared in the 2nd inning 407 for India: Today is the last day ...
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...