தாம்பரம் ரயில்வே பணிமனையில் பயங்கரம் மின்சார ரயிலில் பெண் பலாத்காரம்: தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது

சென்னை: தாம்பரம் அருகே ரயில்வே பணிமனையில் மின்சார ரயிலில் மயங்கி கிடந்த பெண்ணை பலாத்காரம் செய்த தற்காலிக ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் பழங்கள், காய்கறி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை சிலர் விற்பனை செய்து வருகின்றனர். பல்லாவரம் குளத்து மேடு தெருவை சேர்ந்த 40 வயது பெண்ணும் ரயிலில் பழங்கள் விற்று வருகிறார். இவர், செங்கல்பட்டு பரனூர் ஏரிக்கரை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 8ம் தேதி சொந்த வேலை காரணமாக, இவர்  பல்லாவரத்துக்கு வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை முடித்துவிட்டு, பரனூர் செல்வதற்காக அன்றிரவு செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயிலில் சென்றார்.  

செங்கல்பட்டு சந்திப்பை ரயில் சென்றடைந்ததும், பயணிகள் இறங்கி சென்று விட்டனர். ஆனால் மது குடித்திருந்த பெண், சுயநினைவின்றி ரயில் இருக்கையிலேயே தூங்கிவிட்டார். அந்த ரயில் சிறிது நேரத்தில் செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து புறப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக தாம்பரம்  பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அந்த பெண் கண்விழித்து பார்த்தபோது, ரயில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால், வெளியே செல்ல பயந்த அவர் ரயிலின் உள்ளேயே தங்கிவிட்டார்.

அப்போது, பணிமனையில் நிறுத்தப்பட்டிருக்கும் ரயில்களை சுத்தம் செய்ய வந்த தற்காலிக ஊழியர்கள் இரண்டு பேர், தனியாக இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இங்கு நடந்ததைப் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவதாக கூறிவும் மிரட்டினர். இதனையடுத்து, அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பித்து வந்து தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (30), மப்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னை ரயில்களில் பயணிக்கும் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>