ஆன்லைன் கடன் ஆப் மூலம் ரூ.300 கோடி மோசடி ஹாங்க் குற்றப் பின்னணி விவரம் கேட்டு சீன தூதரகத்துக்கு போலீஸ் கடிதம்

சென்னை: சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆன்லைன் ஆப் மூலம் கடன் கொடுத்தவர்கள், வட்டி கேட்டு அடியாட்களை வைத்து மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெங்களூருவில் இருந்து செயல்பட்டு வந்த ஆன்லைன் ஆப் நிறுவனம், வாடிக்கையாளர்களை மிரட்டியதும், அது 110 பேர் வேலை செய்யும் கால் சென்டர் எனவும் தெரியவந்தது. சீனர்களுக்கு சொந்தமான அந்த கால் சென்டரை பிரமோதா மற்றும் பவான் ஆகியோர் நடத்தி வருவதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் லோன் ஆப் நடத்திய சீனாவை சேர்ந்த ஜீயோ யமாவோ (38), வூ யானுலம் (23) மற்றும் அவர்களுக்கு உதவிய பெங்களூருவை சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் ஹாங்க் என்றும், இவர் தற்போது சீனாவில் உள்ளார் என்றும் தெரியவந்தது. இதனால் சென்னை மாநகர காவல் துறை சார்பில் டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், லோன் ஆப் மூலம் 1 லட்சம் பேரிடம் சட்ட விரோதமாக ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஹாங்க் இருப்பதால், அவரது குற்றப் பின்னணி குறித்தும், அவரை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த அனைத்து உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>