எருதாட்ட முன்னோட்டத்தில் விபரீதம் வீட்டின் முன்கூரை இடிந்து 2பேர் பலி: வேப்பனஹள்ளி அருகே சோகம்

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அருகே, எருது விடும் விழாவுக்கான முன்னோட்டத்தின் போது, வீட்டின் முன்கூரை இடிந்து முதியவர், 8 வயது சிறுமி பரிதாபமாக பலியாகினர். மேலும், 13 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில், நேற்று காலை எருதாட்ட நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் நடந்தது. இதை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டனர். ஒரு மாடி வீட்டின் முன்பகுதியில் 15க்கும் மேற்பட்டோர் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

திடீரென அந்த வீட்டின் முன்கூரை சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, எட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிபாலன் (62), நேரலகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவி மேகாஸ்ரீ(8) ஆகியோர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 13 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>