கற்களை சரமாரி வீசி தாக்குதல்; வலைகளை வெட்டி கடலில் வீச்சு ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: துப்பாக்கியால் சுட்டு மற்றவர்கள் விரட்டியடிப்பு; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டி, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். வானில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி மற்றவர்களை விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். படகுகளில் இருந்த வலைகளை பறித்து வெட்டி கடலில் வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.

தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர் கிருபை என்பவரின் விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் வளன்கவுசிக், நிஜான், பிரைட்டன், மாரி, கிஷோர் உட்பட 9 பேரையும் சிறைபிடித்தனர். அவர்களை இரவோடு இரவாக காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு மீனவர்கள் 9 பேரிடமும் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அட்டூழியத்தால் அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பினர். இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 7 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். 36 பேர் இலங்கை சிறைகளில் உள்ளனர். இவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது மேலும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சேசுராஜ்  தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், மீனவர்களையும், படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

>