×

விளைச்சல், வரத்து அதிகரிப்பு எதிரொலி சென்னையில் காய்கறி விலை அதிரடி சரிவு: கேரட் ரூ.20, இஞ்சி ரூ.30 ஆக குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்கறி வந்து கொண்டிருக்கிறது. தற்போது 500 லாரிகளில் காய்கறிகள் வருகிறது. இதனால் காய்கறி விலை கடுமையாக சரிந்துள்ளது. முட்டைகோஸ் கிலோ ரூ.20லிருந்து ரூ.12க்கும், கேரட் ரூ.70லிருந்து 40, 50க்கும், பீன்ஸ் ரூ.50, ரூ.60லிருந்து ரூ.30, 40க்கும், சவ்சவ் ரூ.25லிருந்து ரூ.15க்கும் விற்கப்படுகிறது.

பீட்ருட் ரூ.30லிருந்து ரூ.25க்கும், நூக்கல் ரூ.25, 30லிருந்து ரூ.20க்கும், காளிபிளவர் ரூ.30லிருந்து ரூ.25க்கும், பச்சை மிளகாய் ரூ.40, 50லிருந்து ரூ.25க்கும், இஞ்சி ரூ.70லிருந்து ரூ.40க்கும், சேனைக்கிழங்கு ரூ.25லிருந்து ரூ.15க்கும், சேப்பங்கிழங்கு ரூ.25, 30லிருந்து ரூ.20க்கும், அவரைக்காய் ரூ.40, ரூ.50லிருந்து ரூ.30க்கும், தக்காளி ரூ.20, 25லிருந்து ரூ.15க்கும், பல்லாரி ரூ.30, 40லிருந்து ரூ.20, ரூ.25க்கும், கத்தரிக்காய் ரூ.30லிருந்து ரூ.20க்கும் குறைந்துள்ளது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) ரூ.70 என அதே விலையில் விற்கப்படுகிறது. பச்சை பட்டாணி எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.100லிருந்து ரூ.35ஆக விலை குறைந்துள்ளது.

மொச்சை ரூ.50லிருந்து ரூ.35க்கும் விற்க்கப்படுகிறது. இந்த விலை என்பது காய்கறி விலையில் மிக குறைவான விலையாகும். இதே நிலை தான் 3 மாதங்களுக்கு நீடிக்கும். வரும் நாட்களில் காய்கறி அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. எனவே, மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த விலை உயர்வு குறைவு என்பது மொத்த மார்க்கெட்டில் தான். ஆனால் சில்லரை மார்க்கெட்டில் காய்கறி விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமாக விற்கப்படுகிறது. ஏரியாவுக்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் நெருங்கும் நேரத்தில் காய்கறி விலை அதிரடியாக உயரும். ஆனால், தற்போது காய்கறி விலை அதிகப்பட்சமாக குறைந்துள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , Vegetable prices plummet in Chennai: Carrots fall to Rs 20, ginger to Rs 30
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...