×

பொதுக்குழுவில் சர்ச்சை பேச்சு எதிரொலி அதிமுக-பாஜ மோதல் முற்றுகிறது; அமைச்சர்கள், தலைவர்கள் மீது டெல்லி தலைமைக்கு புகார்; விரைவில் பதிலடி- எல்.முருகன் அதிரடி

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் பாஜ மீதான கடும் தாக்குதலை தொடர்ந்து இரு கட்சிகளிடையே மோதல் முற்றியுள்ளது. அமைச்சர்கள் சிலரும், கட்சியின் மூத்த தலைவர்களும் பாஜவை சீண்டி வருவது குறித்து கட்சியின் மேலிடத்துக்கு தமிழக தலைமை புகார் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு விரைவில் பதிலடி கொடுப்போம் என்று தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதனால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜ அங்கம் வகித்தது.

இந்த கூட்டணி வர உள்ள சட்டசபை தேர்தலிலும் தொடருமா என்பது இதுவரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு இரு கட்சிகளும் நாளுக்கு நாள் கடுமையாக மோதி வருகின்றன. முதலில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பாஜ ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி மேலிடம் யாரை அறிவிக்கிறதோ அவர்கள் தான் முதல்வர் வேட்பாளர். அதிமுகவால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாது என்று பாஜ முதலில் கூறி வந்தது. தொடர்ந்து, தொகுதி பங்கீட்டிலும் பிரச்னை நீடித்து வந்தது. 60 தொகுதிகளை பாஜ கேட்டது. ஆனால், இதற்கு அதிமுக ஒத்துக்கொள்ளவில்லை.

பாஜவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு என்பது கொஞ்சம் கூட கிடையாது. மக்களிடம் செல்வாக்கு பெறும் அளவுக்கு பாஜ வளரவில்லை. நோட்டோவுடன் போட்டியிடும் அளவுக்கு தான் பாஜ உள்ளது. அவ்வாறு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் படுதோல்வி தான் அடைய வேண்டும். அதனால், குறைவான தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் உறுதியாக கூறப்பட்டது. கேட்ட 60 தொகுதிகளுக்கு பதிலாக குறைந்தது 20 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்று மட்டும் அதிமுக கூறி வருகின்றது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கூட்டணி உருவாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாஜவினர் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரஜினி, பாமக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளை இணைத்து புதிய அணியை அமைத்து தேர்தலை சந்திக்க பாஜ திட்டமிட்டது. ஆனால், கடைசியில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறிவிட்டார். இது பாஜவுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. 3வது அணி அமைக்கும் முயற்சியில் பாஜவின் செயலை கண்டு அதிமுக அதிர்ந்து போனது. அதற்கு பதிலடி கொடுக்க அதிமுக முடிவு செய்தது. அதற்கான நிபந்தனைகளையும் அதிமுக வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இனிமேல் நாம் ஒதுக்கும் தொகுதியில் தான் பாஜ போட்டியிட வேண்டும். இல்லா விட்டால் அவர்கள் கூட்டணியில் தேவையில்லை என்று நினைக்கும் அளவுக்கு அதிமுக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ”தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகள் நமக்கு பொருட்டே அல்ல. தமிழகத்தில் தேசிய கட்சிகள் இன்னும் வேரூன்றவில்லை. இந்த தேர்தல் அதிமுக, திமுக இடையே தான் நேரடி தேர்தல்” என்றார். அதுவும் இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையிலேயே கே.பி.முனுசாமி பேசினார். அவர் பாஜவை தான் அவ்வாறு விமர்சித்தார். கே.பி.முனுசாமியின் இந்த ேபச்சுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் எதிர்த்து பேசவில்லை.

கே.பி.முனுசாமியின் இந்த பேச்சு அதிமுக கூட்டணியில் பாஜவை சேர்க்க விரும்பவில்லை என்பதை காட்டுவதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். இதனால், தான் அவர் அவ்வாறு பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் பாஜவை விமர்சித்தது தமிழக பாஜ தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரு அணிகளுக்கு இடையேயான மோதல் போக்கு முற்றி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவில் பொதுக்குழுவில் பேசிய பேச்சு குறித்து அறிக்கையாக தயாரித்து தமிழக பாஜ தலைவர்கள் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் பாஜவை தொடர்ந்து சீண்டும் வகையில் பேசுவது குறித்தும் கட்சி மேலிடத்தில் புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன் பிறகு பதில் அடி கொடுக்கப்படும் தமிழக பாஜ திட்டமிட்டுள்ளது. இதனால், தான் மதுரையில் நேற்று நிருபர்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், “கே.பி.முனுசாமியின் பேச்சுக்கு நான் விரைவில் பதில் அளிப்பேன்” என்று கூறி விட்டு மேலும் எந்த கருத்தையும் அது தொடர்பாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. பொதுக்குழுவில் பேசியது தொடர்பாக அதிமுக டெல்லி மேலிடம் உரிய விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது. இதனால் வரும் நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கே.பி.முனுசாமியின் இந்த பேச்சுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் எதிர்த்து பேசவில்லை. இது அதிமுக கூட்டணியில் பாஜவை சேர்க்க விரும்பவில்லை என்பதை காட்டுவதாக அதிமுகவினர் கூறி
வருகின்றனர்.

* அதிமுக, பாஜ இடையே முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் மோதல் உள்ளது.
* அதிமுக பொதுக்குழுவில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று பாஜவை சாடினார்.
* இது பற்றி பாஜ தேசிய தலைமைக்கு தமிழக தலைமை புகார் செய்துள்ளது.
* அதிமுகவுக்கு பதிலடி தரப்படும் என்று தமிழக பாஜ தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags : speech ,clash ,ministers ,General Assembly ,AIADMK ,BJP ,Delhi ,leaders , Echoes of controversial speech in General Assembly ends AIADMK-BJP clash; Complaints to Delhi leadership over ministers, leaders; Retaliation soon - L. Murugan Action
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...