பொள்ளாச்சி பாலியல் விவகாரம்..! நியாயமான விசாரணையை நடத்த தமிழக அரசு தயாரா? கனிமொழி எம்.பி. கேள்வி

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீசாரால் கடந்த 5-ம் தேதி கைது செய்தனா்.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்த சென்ற திமுக எம்.பி. கனிமொழி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். எத்தனை பெண்கள் இதில் இறந்துள்ளனர் என்பதை விசாரிக்க வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றவே கைதுச் செய்த அருளானந்தத்தைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பேருக்கு 10 பேரை கைதுச் செய்வதை ஏற்க முடியாது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Related Stories:

>