இந்திய தடுப்பூசிக்காக உலகமே காத்திருக்கிறது பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் வரும் 16ம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்பட உள்ள நிலையில், ‘‘இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது,’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் 16வது மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களின் விகிதம் அதிகமாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற நாடுகளுக்குத் தேவையான மருந்துகளை வழங்கும் திறனுள்ள உலகின் மருந்தகமாகவும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட், உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டையும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் உலகம் உற்று கவனித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

திருக்குறளை சுட்டிக்காட்டிபேசிய மோடி    

நேற்றைய உரையில் தமிழை பெருமைப்படுத்தும் விதத்தில் பேசிய மோடி, ‘கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டினார். மேலும், இந்த குறளில் ஒரு சிறந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்று மிகப்பெரும் துறவியும் தத்துவஞானியுமான திருவள்ளுவர், உலகின் மிகப்பழமையான மொழி என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் தமிழில் கூறியுள்ளார். பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே, நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்பதே இந்த திருக்குறளின் அர்த்தம்.

Related Stories:

>