×

ரூ.1.5 கோடி செம்மரக்கட்டைகள் கடத்திய சசிகலா உறவினர்கள்: கைத்துப்பாக்கி, 300 கிராம் தங்கம் பறிமுதல்

திருமலை: ஆந்திராவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சசிகலாவின் உறவினர் உட்பட 16 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட போலீஸ் எஸ்பி தேவபிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடப்பா மாவட்ட போலீசார் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 கார்களை மடக்கி சோதனை செய்ததில், செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சர்வதேச அளவில் செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த சசிகலாவின் உறவினரான பாஸ்கரன், கடப்பாவை சேர்ந்த ராகவேந்திரா, சித்தூர் பீலேரை சேர்ந்த 2 பேர், நெல்லூரைச் சேர்ந்த 3 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 2 கூலித் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் கடத்தல்காரர்கள் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 55 செம்மரக்கட்டைகள், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 2 கார்கள், 300 கிராம் தங்கம், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கடப்பாவை சேர்ந்த ராகவேந்திராவுடன் இணைந்து தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி, சிட்வெல், அட்லூரு ஆகிய வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்டி, தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : relatives ,Sasikala ,pistol , Rs 1.5 crore sheepskin Sasikala's relatives abducted: pistol, 300 grams of gold confiscated
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற...