மெரினா கடற்கரை சீல், கடும் கட்டுப்பாடுகள் காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்

* 14,15,17 தேதிகளில் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

* மாஸ்க் அணிந்து வருவது அவசியம்

சென்னை: காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு சீல், தனிமனி இடைவெளி, மாஸ்க் அணிவது உள்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் 14, 15, 17 தேதிகளில் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் கடற்கரையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு மெரினா கடற்கரைக்கு வருபவர்கள், கார், பைக்குகளிலும், புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் மெரினா கடற்கரைக்கு வருவது வழக்கம். இதனால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்தை நிறுத்தியும், காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது போன்று காணும் பொங்கல் அன்று வரும் 16ம் தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போலீசாரும், காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர், திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் காணும் பொங்கல் அன்று என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மெரினா கடற்கரைக்குள் வாகனங்களில் செல்ல முடியாதபடி சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலி அமைப்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும் புத்தாண்டு போலவே காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை சீல் வைக்கப்படுகிறது.

கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் எல்லாம் 15ம் தேதி நள்ளிரவிலேயே முடிந்துவிடும். காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் பொங்கல் திருநாளான 14ம் தேதி, மாட்டுப் பொங்கல் தினமான 15ம் தேதி, காணும் பொங்கலுக்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதி ஆகிய 3 நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே 14, 15, 17 ஆகிய தேதிகளில் மெரினா கடற்கரைக்கு அதிகம் பேர் வருவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அங்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

* பொங்கல் திருநாளான 14ம் தேதி, மாட்டுப் பொங்கல் தினமான 15ம் தேதி, காணும் பொங்கலுக்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதி ஆகிய 3 நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு இரவு 10 மணி வரை மட்டுமே

அனுமதிக்கப்படுவார்கள்.

* மெரினா கடற்கரைக்கு வருபவர்கள்  கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* காணும் பொங்கல் அன்று மெரினா  கடற்கரைக்கு பொதுமக்கள் வராத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மெரினா கடற்கரைக்குள் வாகனங்களில் செல்ல முடியாதபடி சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

Related Stories:

>