×

சேலத்தில் அதிகாரிகள், ஊழியர் சங்க முதல் மாநாடு மற்ற வங்கியுடன் கிராம வங்கிகளை இணைத்தால் வேலைநிறுத்தம்: அகில இந்திய பொதுச்செயலாளர் பேட்டி

சேலம்: கிராம வங்கிகளை பிற வங்கிகளுடன் இணைக்க முற்பட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் கூறினார். தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முதல் மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. அதிகாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி, ஊழியர் சங்க தலைவர் சுரேஷ், அமைப்பு செயலாளர் பருதிராஜா  முன்னிலை வகித்தனர். இதில், அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜூவன், பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வர ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

பின்னர் அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரரெட்டி அளித்த பேட்டி: நாடு முழுவதும் 686 மாவட்டங்களில் 43 கிராம வங்கிகள், பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கீழ் இயங்குகிறது. இதில், லாபம் ஈட்டக்கூடிய வங்கியை ஏ பிரிவாகவும், சராசரியாக இயங்கும் வங்கிகளை பி பிரிவாகவும், நஷ்டத்தில் இயங்கும் வங்கியை சி பிரிவாகவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பிரித்துள்ளன. ஏ பிரிவு தொடர்ந்து இயங்கவும், பி பிரிவு வங்கிகளுக்கு அதிக முதலீடு வழங்கவும், சி பிரிவு வங்கிகளை இதர பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதை நாங்கள் எதிர்க்கிறோம். கிராம வங்கி என்பது மக்களுக்கு சேவையாற்றவே தொடங்கப்பட்டவை. அதில், லாப நோக்கத்தை மத்திய அரசு எதிர்பார்ப்பது தவறான கொள்கை. இந்த வங்கிகளை இணைத்து சில கார்ப்பரேட் கம்பெனிகளிடம் வழங்க முயற்சிப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். அதனால் கிராம வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலோ, காலி பணியிடங்களை நிரப்பாமலோ அரசு தொடர்ந்து இருந்தால், நாங்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை கையில் எடுப்போம். டெல்லியில் ேபாராடும் விவசாயிகளுக்கு கிராம வங்கி ஊழியர்களும் ஆதரவாக நிற்போம்.

2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தற்கொலை செய்துள்ளனர். கிராம வங்கிகளுக்கு அதிக முதலீடு வழங்கி, விவசாயம். கிராமப்புற மக்கள் மேம்பாட்டிற்கு கடன் கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் தற்கொலையை தடுக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Salem ,Employees Union First Conference Strike ,Grama Banks ,General Secretary Interview ,India ,banks , Officials in Salem, Employees Union first conference on strike if rural banks merge with other banks: All India General Secretary Interview
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை