நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் ஒப்புதல் அவசியம்

* மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கடிதம்

* எல்ஐசி கட்டிடத்தை புனரமைக்க ஆலோசனை கேட்பு

சென்னை: நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் ஒப்புதல் அவசியம் என்று பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் கடந்த 2018 ஜூன் 1ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த கோட்டம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.33 கோடி செலவில் ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணி, தொடர்ந்து சேலம், காஞ்சிபுரம் நீதிமன்ற கட்டிடங்கள், கோவையில் உள்ள குதிரை வண்டி கோர்ட் உள்ளிட்ட கட்டிடங்களில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

தொடர்ந்து அரசு அச்சகம், கவர்னர் பங்களா உட்பட மாநிலம் முழுவதும் 29 பாரம்பரிய கட்டிடங்களை புனரைமக்க தமிழக அரச சார்பில் ரூ.80 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இக்கோட்டம் மூலம் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்த பிறகு பணிகள் தொடங்கப்படுகிறது. இந்த நிலையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் பாரம்பரிய கட்டிடங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும், நூற்றாண்டு பழமையான 3 ஆயிரம் கட்டிடங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் சார்பில் அனைத்து மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது. அதில், பொதுப்பணித்துறை சார்பில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்தின் மூலம் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறைகள் இக்கோட்டத்திடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். மேலும், எங்களின் ஆலோசனை பெற்று கொண்டு தொடங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டது. அதன்பேரில், வேளாண்மை துறைக்கு சொந்தமாக கோவையில் உள்ள பாரம்பரிய கட்டிடம், மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள எல்ஐசி நிறுவன கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பது தொடர்பாக  ஆலோசனை கேட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், இக்கோட்டம் சார்பில் பாரம்பரிய கட்டிட பணிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறது. அதே நேரத்தில் பாரம்பரிய கட்டிடம் கோட்டம் மூலம் பழமை மாறாமல் புதுப்பிப்பது தொடர்பாக அவ்வபோது ஆய்வு செய்யவும் முடிவு செய்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘தற்போது பல்வேறு துறைகளின் கட்டுபாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை புனரமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடும் போதே பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டிடத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தான் மற்ற துறைகள் சார்பில், பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டத்திடம் அணுகி வருகின்றனர்’ என்றார்.

Related Stories:

>