×

ச.கி.மீட்டருக்கு 657 கேமராக்கள் மூலம் உலகளவில் நம்பர் ஒன் இடம் பிடித்தும் பயனில்லை சென்னையில் செயலிழந்த மூன்றாவது கண்: பராமரிப்பு குறைபாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை மாநகரில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வரை போக்குவரத்து சிக்னல்களில் மட்டும் வெறும் 850 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதுவும் அப்போது போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த அருண் பெரும் போராட்டத்திற்கு இடையே அந்த திட்டத்தை ஆரம்பித்தார். சென்னை மாநகர காவல் துறை கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் தன்னார்வ நிறுவனங்கள், வியாபாரிகள் சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கங்கள் உதவியுடன் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் திட்டத்தை நகரம் முழுவதும் விரிவுப்படுத்தினர். இந்த திட்டத்திற்கு ‘மூன்றாவது கண்’ என்று பெயரிடப்பட்டு சிசிடிவியின் பயன்பாடு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு குறும் படத்தை நடிகர் விக்ரம் மூலம் வெளியிட்டார்.

அதன்பிறகு மாநகரம் முழுவதும் ‘மூன்றாவது கண்’ திட்டத்தை செயல்படுத்த 139 சட்டம் ஒழுங்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்தந்த காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலைகள், தெருக்கள், வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. இந்த திட்டத்திற்காக அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உன்மையில் அரசு மற்றும் காவல் துறை சார்பில் பெரிய அளவில் பணம் செலவு செய்யப்படவில்ைல. அதற்கு பதில் இன்ஸ்பெக்டர்கள் மூலம் தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் பணம் வசூலித்து சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.

‘மூன்றாவது கண்’ திட்டத்தின் கீழ் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரியில் உள்ள போலீஸ் அலுவலகம், மற்றும் வண்ணாரப்பேட்டையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. அதன் மூலம் சென்னை நகரம் சிசிடிவி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது அனைத்தும் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு சென்னையில் பெய்த கனமழை, சூறாவளியுடன் கூடிய புயல் மற்றும் போதிய பராமரிப்பு இன்றி சாலைகள், தெருக்கள் என பொது இடங்களில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களில் 70 சதவீத கேமராக்கள் பழுதடைந்து விட்டது. இந்த பழுதுகளை நீக்க அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த இடங்களிலும் சிசிடிசி கேமராக்கள் பழுதுபார்க்கப்பட்டதாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் போலீசார் கூறியதாவது: ”குற்றங்களை குறைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக ‘மூன்றாவது கண்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான சிசிடிவி கேமராக்களுடன் இணைக்கப்பட்ட கேபிள்களும் துண்டிக்கப்பட்டு பழதாகிவிட்டது. அதை சரிசெய்ய சிசிடிவி கேமராக்கள் அமைத்த எந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும் முன் வர வில்லை. இதனால் தான் தற்போது ‘மூன்றாவது கண்’ திட்டம் செயலிழந்து வருகிறது. இதனால் தற்போது சென்னையில் குற்ற சம்பவங்களுக்கும் தனியார் கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கேமரா உதவியை தான் போலீசார் நாடி வருகின்றனர்.

யானைக்கவுனியில் பைனாச்சியர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கூட போலீசார் தனியார் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியால் தான் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் காண முடிந்தது. இது போல் பல வழக்குகள் உள்ளன. 2019ம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து குற்றங்களை குறைத்ததற்காக ‘ஸ்கோச்’ விருது மாநகர காவல் துறைக்கு வழங்கி கவுரவித்தது. அனைத்து பெருமைகளுக்குரிய விருதுகளை 2020 ம் ஆண்டு மாநகர காவல் துறை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாட்டு அறை போலீசார் வேதனையுடன் கூறினர்.

உலகளவில் தனியார் நிறுவனம் ஒன்று நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில், உலகளவில் சீனா நாட்டின் பெய்ஜிங்கில் 10.15 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு அதிக அடர்த்தியுடன் அதாவது 657 சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்கள் பட்டியலில் உலகளவில் சென்னை மாநகரம் தான் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த பெருமைகள் அனைத்தும் சென்னை மாநகர காவல் துறையைத்தான் சாரும்.

* 2016ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை  30 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.
* 2017ம் ஆண்டு 1.35 லட்சம் சிசிடிவி  கேமராக்களும், 2018ம் ஆண்டு 2.30 லட்சம் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டன.
* இறுதியாக 2019ம் ஆண்டு மாநகரம் முழுவதும் மொத்தம் 2.80 லட்சம் சிசிடிவி கேமராக்கள்  அமைக்கப்பட்டன.

சென்னையில் சிசிடிவி உருவான கதை
சென்னையில் போக்குவரத்து போலீசார் பொது இடங்களில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர். அதை பொதுமக்கள் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக பெரிய அளவில் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அப்போது மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த அருண், மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய போக்குவரத்து சிக்னல்களை தேர்வு செய்து சிசிடிவி கேமராக்களை முதன்முதலில் அமைத்தார். அதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் வீடுகளுக்கே கடிதம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல், போக்குவரத்து போலீசார் சட்டையில் சிறிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் போலீசாரிடம் அபராதம் கட்ட வேண்டாம். வங்கிகள், மத்திய அரசு அலுவலகங்கள், ஏன் இணைய தளங்கள் மூலமாக கூட அபராதம் கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதில் கேமரா திட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவியின் பயன்பாடு மாநகரம் முழுவதும் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் விரிவுப்படுத்தினர்.

Tags : With 657 cameras per sq km, it is useless to be ranked number one in the world.
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...