×

தமிழக பொதுப்பணித்துறையில் 25 ஆயிரம் கான்ட்ராக்டர்கள் உரிமம்: புதுப்பிக்க மார்ச் 31 வரை கால அவகாசம்

* டெண்டரில் கலந்து கொள்ள அனுமதி
* அரசு உத்தரவு

சென்னை: கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்க வரும் மார்ச் 31ம் வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ₹10 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஒப்பந்ததாரர்கள் உரிமம் புதுப்பிப்பது தொடர்பாக கடந்தாண்டு ஜூன் மாதம் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவது சிரமம். எனவே, உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று, ஒப்பந்ததாரர்கள் உரிமம் புதுப்பித்தலுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் ஜனவரி 1ம் தேதி முதல் உரிமம் புதுப்பித்து கொள்ள கான்ட்ராக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டன. தற்போது, கொரோனா பரவிவரும் சூழலில் ஒப்பந்ததாரர்கள் தங்களது புதுப்பித்தலுக்காக சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேரில் வருவது சிரமம் என்பதால் மேலும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையேற்று, ஒப்பந்ததாரர்கள் உரிமம் புதுப்பிக்க மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்க வரும் மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கான்ட்ராக்டர்கள் டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : contractors ,Tamil Nadu Public Works Department: Renewal , Licenses of 25 thousand contractors in the Tamil Nadu Public Works Department: Renewal period till March 31
× RELATED பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ஒப்பந்ததாரர்கள் 3 பேர் கைது