×

விஜிலென்ஸ் உதவி கண்காணிப்பாளர் பணிக்கு எம்.எஸ்சி கிரிமினாலஜி படிப்பை கல்வி தகுதியாக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: சமூக பாதுகாப்பு துறையில் விஜிலன்ஸ் உதவி கண்காணிப்பாளர் பணி நியமனத்திற்கு எம்.ஏ கிரிமினாலஜி படிப்புக்கு சமமாக எம்எஸ்சி கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ் படிப்பையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சமூக பாதுகாப்பு துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சமூக பாதுகாப்பு துறையில் உதவி கண்காணிப்பாளர் (விஜிலன்ஸ்) பணிக்கு ஆட்களை தேர்வுக்கு எம்.ஏ.கிரிமினாலஜி படித்தவர்களை தகுதி பெற்றவர்கள் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், தற்போது தமிழகத்தில் எம்.ஏ கிரிமினாலஜி படிப்பு நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக எம்.எஸ்.சி கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக பாதுகாப்பு துறையின் உதவி கண்காணிப்பாளர் பணிக்கு எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி நிராகரித்து வருகிறது. இதனால், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ கிரிமினாலஜி படித்தவர்களுக்கே பணி வாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ் படித்த மாணவி நிஷாந்தி, சென்னை பல்கலைக்கழகத்திடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டார்.

அதற்கு பல்கலை. சார்பில் உரிய பதில் வரவில்லை. இதையடுத்து, அந்த மாணவி மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டார். இந்த முறையீடு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கு என்பதால் விசாரணை தொலைபேசி வாயிலாக நடந்தது. மாணவி, சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர் முனுசாமி, சென்னை பல்கலைக்கழக கிரிமினாலஜி துறை தலைவர் ராம்தாஸ் ஆகியோர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் அளித்த உத்தரவு வருமாறு: ஒரு படிப்பை தரம் உயர்த்தும்போதும் அல்லது அந்த படிப்பின் பெயரை மாற்றும்போதும் அது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் இதை சென்னை பல்கலைக்கழகம் செய்ய தவறிவிட்டது. எனவே, எம்.ஏ கிரிமினாலஜிக்கு இணையான படிப்புதான் எம்எஸ்.சி கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்சும். அரசு பணிகளில் எந்தந்த பணிகளுக்கு எம்.ஏ.கிரிமினாலஜி கல்வி தகுதி நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த பணிகளுக்கு எம்.எஸ்.சி.கிரிமினாலஜி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ் படிப்பையும் தகுதியாக்குவது குறித்து சமூக பாதுகாப்பு துறைக்கு சென்னை பல்கலைக்கழகம் கருத்து அனுப்ப வேண்டும். இந்த கருத்துரு குறித்து சமூக பாதுகாப்பு துறை 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தகவல் ஆணையர் உத்தரவில் கூறியுள்ளார்.

* ஒரு படிப்பை தரம் உயர்த்தும்போதும் அல்லது அந்த படிப்பின் பெயரை மாற்றும்போதும் அது தொடர்பாக சம்மந்தப்பட்ட  துறைக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதை சென்னை பல்கலைக்கழகம்  செய்ய தவறிவிட்டது.
* தொடர்ந்து எம்.ஏ கிரிமினாலஜி நடத்தப்பட்டுவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைக்கிறது.
* புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது. இதனால், தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது.

Tags : Assistant Superintendent ,Government of Tamil Nadu , Action to qualify MSc Criminology for the post of Vigilance Assistant Superintendent: State Information Commission orders Government of Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...