×

இந்து சமய அறநிலையத்துறையில் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு: மீண்டும் வெடித்தது சர்ச்சை

ெசன்னை: இந்து சமய அறநிலையத்துறையில் ஐஏஎஸ் அதிகாரி கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக தலைமை பொறுப்பில் ஆணையர் செயல்படுகிறார். அவ ருக்கு உதவியாக தலைமையிடத்தில் 3 கூடுதல் ஆணையர், 4 இணை ஆணையர் பணியிடங்கள் உள்ளது. இதில், கூடுதல் ஆணையர் பணியிடங்களில் அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர்களே பதவி உயர்வின் பேரில் இப்பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு வேண்டபட்ட அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில், அறநிலையத்துறைக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றத்தில் வரும் போது, சரியான தகவல் தெரிவிப்பதில்லை.

இதனால், பல நேரங்களில் அறநிலையத்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் புகார் கூறப்பட்டன.இதனால், கூடுதல் ஆணையர் பணியிடங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று, கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) பொறுப்பு வழங்கி கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அவரிடம் பதவி உயர்வு, ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மீதான குற்றச்சாட்டு விசாரணை நடத்துவது, முதுநிலை கோயில் நிர்வாகம் சார்ந்த அனுமதி, வரவு, செலவு திட்ட அங்கீகாரம், புதிய பணியிடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கூடுதல் ஆணையர் ஐஏஎஸ் அதிகாரி ரமண சரஸ்வதிக்கு பொறுப்பு பவர்புல்லாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அறநிலையத்துறையில் ஒரு தரப்பினர் கடும் எதிரப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 மற்றும் விதி 3ன் கீழ் கூடுதல் ஆணையர் பணி விதிகள் 1997ன் படி, இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர்களில் ஒருவரையே பதவி உயர்வு மூலமாக கூடுதல் ஆணையராக பணி நியமனம் செய்யப்பட வேண்டும். எனவே, சட்ட விதிகளுக்கு முரணாக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்த தலைமை செயலாளரின் உத்தரவானது சட்ட அத்துமீறலாகும்.

எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளை கூட தெரிந்து கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.


Tags : commissioner ,IAS officer ,Hindu Temples Department: Controversy , Opposition to the appointment of an IAS officer as an additional commissioner in the Hindu Temples Department: Controversy erupts again
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...