1.80 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் சாலையோர வியாபாரிகள் 27,000 பேருக்கு மட்டுமே கடன்: 20வது இடத்தில் தமிழகம்

சென்னை: சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தில், தமிழகத்தில் சமர்பிக்கப்பட்ட 1.80 லட்சம் விண்ணப்பங்களில் 44 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். இவர்களுக்கு ரூ1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதற்கிடையில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ‘ஸ்வநிதி’ திட்டத்தில் ரூ10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

ஓராண்டிற்குள் முறையாக கடனை திருப்பி செலுத்தினால் ஏழு சதவீத வட்டி மானியம் கிடைக்கும், எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கடன் பெற சாலையோர வியாபாரிகள் pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் தமிழகத்தில் 2.62 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,80,508 பேர் விண்ணப்பங்கள் சமர்பித்துள்ளனர். இதில் 44,572 பேருக்கு மட்டுமே கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், 27,055 பேருக்கு மட்டுமே கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்க ரூ44.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ₹26.51 கோடி தொகை மட்டுமே வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் விண்ணப்பங்களை சமர்பித்தவர்களில் 35 சதவீதம் பேருக்கு மட்டும் கடன் வழங்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இந்திய அளவில் தமிழகம் 20 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* விண்ணப்பித்தவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள்.

* சராசரியாக 34 நாட்களில் கடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

* பழம், காய்கறி விற்பவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* பெருநகரங்களில் சென்னை 8வது இடத்தில் உள்ளது.

Related Stories:

>