×

இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில்அதிமுக பொதுக்குழுவில் பாஜ மீது கடும் தாக்கு: இரு கட்சிகள் இடையே மோதல் முற்றுவதால் கூட்டணியில் பரபரப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கமாட்டோம் என்று கூறி வந்த பாஜவை, அதிமுக பொதுக்குழுவில் கடுமையாக குற்றம்சாட்டி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தாக்குதல் தொடுத்தார். மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் கே.பி.முனுசாமியின் பேச்சை கேட்டும் அதற்கு மறுப்பேதும் கூறவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதற்கு நேற்று நடந்த பொதுக்குழுவும், செயற்குழுவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் ஒரு படி மேலே சென்று, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில்(என்டிஏ)தான் அதிமுக உள்ளது. அதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை என்டிஏ தலைமைதான் அறிவிக்கும் என்று தமிழக பாஜ தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு பதில் அளித்து வரும் அதிமுக அமைச்சர்கள், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று எச்சரித்தனர். அந்த எச்சரிக்கைக்கு பின்னரும் பாஜ தலைவர்கள் தங்கள் கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அவர்கள் உறுதியாகவே இருந்து வருகின்றனர். அதோடு தினமும் அதே கருத்தையே வலியுறுத்தி வருகின்றனர். இது அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கி, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் என்பது, கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை கழற்றிவிட வேண்டும் என்ற அதிகாரம்தான். அவ்வாறு அதிகாரம் பெற்ற  தலைவர்களான இருவர் முன்னிலையில் பாஜ மீது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி கடும் தாக்குதல் தொடுத்துள்ளார். இது கூட்டணியில் கடும் மோதலை உருவாக்கியுள்ளது. கே.பி.முனுசாமி கூட்டத்தில் பேசியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்தோம். தொண்டர்களில் இருந்து அமைச்சர்கள் வரை இரண்டாக பிரிந்தோம். இப்போது அதை உணர்ந்த பிறகுதான் அனைவரும் இணைந்திருக்கிறோம்.தமிழகத்தை பொறுத்தவரை நமக்கு தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல. காரணம், தேசிய கட்சிகள் என்பது இன்னும் தமிழகத்தில் வேரூன்றவில்லை. அவர்கள் ஒன்று அதிமுகவுடன் இணைய வேண்டும்.

இல்லையென்றால் திமுகவுடன் இணைய வேண்டும். இந்த தேர்தல், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி தேர்தல். கிராமத்தில், மாமன் - மச்சானாக, அண்ணன் - தம்பியாக இருப்பான். ஆனால் ஏற்றுக்கொண்ட தலைமையை விட்டுக் கொடுக்க மாட்டான். எதிரிகளையும் நாம் குறைத்து மதித்துவிட முடியாது. அவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமையை அண்ணன் - தம்பியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தேசிய கட்சிகள் எல்லாம் சிரித்துக் கொண்டு விளையாட்டு மட்டும்தான் பார்க்கும். அவர்களது சக்தி அவ்வளவுதான். சில பேர் சொல்கிறார்கள். ஒருவர் வெளியே வந்தால் (சசிகலா) அதிமுக கட்சி 2ஆக உடையும், 4ஆக உடையும் என்கிறார்கள். ஸ்லீப்பர் செல் என்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், எல்லாருக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளரும் (இபிஎஸ்) ஆட்சி, கட்சியையும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் (சசிகலா) வெளியே வந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெளியேவந்தால் அவருக்கு ஆயிரத்து எட்டு பிரச்னை இருக்கிறது.

ஆனால் சிலர் இதை வைத்து, நமக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 3 மாதம்தான் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டும். யார் வெளியே வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார். தாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறி வந்தாலும், தமிழகத்தில் ேநாட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியதாக எதிர்க் கட்சிகளால் கிண்டல் செய்யப்பட்டு வந்த பாஜவை தற்போது கூட்டணியில் உள்ளதாக கூறப்படும் அதிமுக தலைமையே போட்டுத் தாக்கியுள்ளது,  தமிழக பாஜ தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* காலை 8.50 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் என்பதால் 11 மணிக்கு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. காலை 11.10 மணிக்கு பொதுக்குழுவுக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், 11.15 மணிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான பென்ஜமின் மாலை அணிவித்து வரவேற்றார். இரண்டு பேருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு, மாலை, பூங்கொத்து வழங்கி மண்டபத்துக்கு அமைச்சர்கள் அழைத்து சென்றனர்.

* பொதுக்குழுவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு - வேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சில ஆம்புலன்சுகளும் சிக்கிக் கொண்டது. பொதுக்குழு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

* பொதுக்குழு மண்டப வாசல் அருகே வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக கட்சி பிரமுகர் ஒருவர் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது, அந்த பிரமுகரின் சட்டை பையில் இருந்து மர்ம வாலிபர் ஒருவர் ரூ.1.5 லட்சம் பணத்தை திருடி விட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டது. தனியார் டிவி ஒளிப்பதிப்பாளர் வீடியோ கேமராவில் பதிவான அந்த காட்சியை வைத்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

சசிகலாவுடன் பாஜ ரகசிய பேச்சு?
கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினி அரசியல் கட்சித் தொடங்கினால், பாமக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து அதிமுகவை மட்டும் கழற்றிவிட்டு விட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜ நினைத்திருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் ரஜினி கட்சித் தொடங்கவில்லை என்று அறிவித்து விட்டார். இதனால் அதிமுகவுடன் கூட்டணி சேருவதைவிட பாஜகவுக்கு வேறு வழியில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதனால்தான் அதிமுக தலைவர்களும் பாஜகவை போட்டுத் தாக்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சசிகலா வருகிற 27ம் தேதி விடுதலையாகிறார். அவருடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக மேலிட தலைவர்கள் ரகசியமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



* எடப்பாடி பழனிசாமியை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜ மறுத்து வருகிறது.
* நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பாஜவை கடுமையாக தாக்கி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி பேசினார்.

Tags : OPS ,BJP ,parties ,AIADMK ,clashes , EPS, OBS attack BJP in AIADMK general body: clash between two parties Stirring up the alliance as it unfolds
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்