×

கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் ‘கன்பார்ம்’: பல லட்சம் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் உயிருடன் அழிப்பு

புதுடெல்லி: கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பல லட்சம் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் உயிருடன் அழிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பல  மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ள நிலையில் ராஜஸ்தானில் ஏராளமான காக்கைகள் உயிரிழந்ததற்கும் பறவைக் காய்ச்சல் காரணம் என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள  ஏராளமான பண்ணைகளில் கடந்த சில நாட்களில் 4 லட்சம் கோழிகள் இறந்த நிலையில், பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழிகளைக் கொல்ல அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து பறவைக் காய்ச்சல் பரவி விடக் கூடாது என்பதற்காக, மகாராஷ்டிராவில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் 20 காகங்கள் உயிரிழந்ததை அடுத்து, அங்கும் பறவைக் காய்ச்சல் பரவி  இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் 10 நாட்களுக்கு கோழி இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில்  முன்னெச்சரிக்கையாக வனவிலங்குகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில், விலங்கியல் பூங்காவில் பறவைகளுக்கு நடைபெற்ற பரிசோதனையில் பறவை காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல இமாச்சலப் பிரதேசம், குஜராத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளது. இதுவரை,  கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், அரியானா,  குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் இருப்பது சோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், பறவைக் காய்ச்சலை தடுக்க பாதிக்கப்பட்ட  மாநிலங்களில் மத்திய குழுக்கள் களமிறக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கேரளா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை கொண்டு வர தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அரசுகளும் தடை விதித்துள்ளன. பஞ்சாப்பில் வெளிமாநிலங்களில் கோழித் தீவனங்கள் கொண்டு வர தடை  விதிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலின் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் கறிக்கோழி மற்றும் முட்டை விலையும் கணிசமாக சரிந்துள்ளது. இதனிடையே, கோழி இறைச்சி, முட்டையை நன்றாக சமைத்து உண்பதால் எந்த பாதிப்பும்  ஏற்படாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Tags : states ,Rajasthan ,Madhya Pradesh ,Kerala ,millions , Bird flu 'confirmed' in 6 states including Kerala, Rajasthan, Madhya Pradesh: Millions of birds, including ducks, extinct
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து