×

கூட்டணி தர்மத்தை மீறலாமா? சிவசேனா நிர்வாகியை வளைக்கும் சரத்பவார் : டுவிட்டை போட்டுவிட்டு நீக்கியதால் பரபரப்பு

மும்பை: சிவசேனா கட்சி நிர்வாகியை தனது கட்சியில் சேரவுள்ளதாக டுவிட் செய்த சரத் பவார், பின்னர் அந்த டுவிட்டை நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில்  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்  கூட்டணி (மகா விகாஸ் அகாதி) ஆட்சி நடைபெறுகிறது. குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றொரு கட்சிக்குச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சோலாப்பூரைச் சேர்ந்த முன்னாள் சிவசேனா தலைவர் மகேஷ் கோத்தே  மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் சிவசேனாவிலிருந்து விலகியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சிவசேனா கட்சியின் சோலாப்பூர் பிரிவும், மகேஷ்  கோத்தே கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவித்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சோலாப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் மகேஷ் கோத்தே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று (நேற்று) தேசியவாத காங்கிரஸ் கட்சியில்  சேரவுள்ளனர். மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரையும் வரவேற்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவால் கூட்டணி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணிக்குள் இருந்து கொண்டே மற்ற கட்சியின்  நிர்வாகிகளை தங்கள் கட்சிக்குள் இழுப்பது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, சரத்பவார் தான் வெளியிட்ட டுவிட்டர் பதிவை அடுத்த சில நிமிடங்களில் நீக்கினார். இச்சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

கடந்தாண்டு, அகமதுநகர் மாவட்டத்தின் பார்னரைச் சேர்ந்த ஐந்து சிவசேனா கவுன்சிலர்கள் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தனர். இது ஆளும் கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியது. இருப்பினும், தேசியவாத காங்கிரசில் ேசர்ந்த இந்த  கவுன்சிலர்கள் மீண்டும் சிவசேனாவுக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Alliance ,executive ,Shiv Sena ,Sarabjit , Can the Alliance violate morality? Shiv Sena executive bends over Sarabjit: Tweet over tweeting
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு