×

குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் வரத்து தொடங்கியது: கரும்பு ஒரு கட்டு ரூ450

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகள், பனங்கிழங்குகள் விற்பனை தொடங்கி உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14ம்தேதி கொண்டாடப்படுகிறது. வருகிற  13ம்தேதி போகி பண்டிகை ஆகும். குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டும். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு ெகாரோனா கட்டுப்பாடுகளால் இவற்றுக்கு அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொங்கலையொட்டி வீடுகளில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்த வண்ணம் உள்ளன.  பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி ஆகும்.

எனவே வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வரத்து தொடங்கி உள்ளன. கரும்பு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு உள்ளிட்டவை விற்பனைக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.  பொங்கல் சீர்வரிசை பொருட்கள் அளிப்பதற்காக பித்தளை மற்றும் வெண்கல பானைகள் வாங்குவதிலும் மக்கள் ஆர்வமாக உள்ளனர். மண் பானைகளும் பல்வேறு விதமான வகைகளில் விற்பனைக்காக வந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கரும்புகள் வந்து குவிந்துள்ளன. திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் வந்துள்ளன. ராஜபாளையம், நிலக்கோட்டை, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகள் வந்துள்ளனர். கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகளின் விலைகள் கடந்த ஆண்டை விட  கடுமையாக உயர்ந்துள்ளன. கரும்பு ஒரு கட்டு ரூ.450, ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் கிழங்கு ரூ.40, 50 என பல்வேறு வகைகளில் தரத்துக்கேற்ப விற்பனையாகிறது.

பனங்கிழங்கு ஒரு கட்டு (24 எண்ணம்) ரூ.130, ரூ.145  என விற்பனையாகிறது.  கரும்பை பொறுத்தவரையும் விளைச்சல்  போதுமானதாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் (15ம்தேதி) மாட்டு பொங்கல் ஆகும். அதற்கு மறுநாள் காணும் பொங்கல் ஆகும். தொடர்ந்து விடுமுறை வருவதால் சுற்றுலா தலங்களுக்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Tags : district ,Kumari , Pongal items started arriving in Kumari district: A bundle of sugarcane costs Rs 450
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்