×

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு: 950 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டையொட்டி 950 மாடுபிடி வீரர்களுக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. தைப்பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.14, பாலமேட்டில் ஜன.15, அலங்காநல்லூரில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்து டோக்கன் வழங்கும் பணி இன்று நடந்தது. இதற்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மானாமதுரை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து நேற்றிரவு முதலே வீரர்கள் அலங்காநல்லூர், பாலமேட்டில் குவிந்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் டோக்கன் வழங்கப்பட்டது. 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், எடை 50 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும், உயரம் 5 அடிக்கு மேல் இருக்க வேண்டும், உடலில் பெரிய காயத்திற்கான தழும்பு, அறுவை சிகிச்சை செய்த தழும்பு ள் ஏதும் இருக்கக்கூடாது என்ற விதிமுறை மாடுபிடி வீரர்களுக்கு கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட சுகாதார துறை இயக்குநர் அர்ஜூன்குமார் தலைமையில் வட்டார மருத்துவர் வளர்மதி, மருத்துவர்கள் மோகன்குமார், ஹமிதா, பூபேஸ்குமார், ஆய்வாளர்கள் ராமன், ராஜசேகர், முருகன், முருகேசன் உள்ளிட்டோர் அடங்கிய 80 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினர்.

அலங்காநல்லூரில் 500 வீரர்களுக்கும், பாலமேட்டில் 450 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் ஜன. 11, 12, 13 ஆகிய தேதிகளில் வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு நடக்கும் கொரோனா பரிசோதனை முடிவை பொறுத்தே ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும்.

அவனியாபுரம்
அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுகாதார துறை சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் பங்கேற்க 1000க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு குவிந்தனர். வருவாய்த்துறை சார்பில்  350 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு, மருத்துவ  பரிசோதனை நடந்தது.


Tags : cowboys ,Palamedu Jallikattu , Alankanallur, Palamedu Jallikattu: Tokens for 950 cowboys
× RELATED திருச்சி மாவட்டத்தின் முதல்...