×

பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டுகிறது பித்தளை, வெண்கல பானைக்கு டிமாண்ட்

திண்டுக்கல்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பாத்திரக்கடைகளில் பித்தளை, வெண்கல பானைகள் விற்பனை ஜோராக நடக்கிறது.பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் மண்பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். காலப்போக்கில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் வெண்கலம், பித்தளை பானைகளில் பொங்கல் வைக்க ஆரம்பித்தனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜன. 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள பெரியகடை வீதி, பஜாரில் உள்ள பாத்திரக்கடைகளில் வெண்கலம், பித்தளை பானைகள் விற்பனை களைகட்டியுள்ளது.

மதுரை, கும்பகோணம் பகுதியில் தயாரிக்கப்படும் பானைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்கின்றனர். பல்வேறு வடிவங்களில் வேலைப்பாடுகளுடன் கூடிய பளபளக்கும்  பித்தளை, வெண்கலம், செம்பு உலோகங்களால் செய்யப்பட்ட பானைகள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பித்தளை பானை  கிலோ ரூ.700க்கும், வெண்கல பானை கிலோ ரூ.650க்கும் விற்கப்படுகிறது. திண்டுக்கல் மற்றும்  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர், பொங்கலுக்கு வெண்கலம், பித்தளை பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல் பாத்திரக்கடை உரிமையாளர் கருணாகரன் கூறுகையில், ``பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளது. ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில்  தயாரிக்கப்படும் வெண்கலம், பித்தளை பானைகளை கொள்முதல் செய்து விற்கிறோம். ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கல் மற்றும் சீர்வரிசை கொடுப்பதற்காகவும் பானை, விளக்கு உள்ளிட்டவைகளை அதிகளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்’’ என்று கூறினார்.



Tags : Pongal Festival Sale Weeds Brass , Pongal Festival Sale Weeds Brass, Bronze Pot Demand
× RELATED முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்;...