×

மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் மண் சரிவு 3வது நாளாக தொடரும் சீரமைப்பு பணி

வீரவநல்லூர்:  மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் 3வது நாளாக நடைபெறும் சீரமைப்பு பணியால் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. மணிமுத்தாறு அணையின் முக்கிய பிரதான கால்வாயாக 80 அடி கால்வாய் திகழ்கிறது. இக்கால்வாயில் 1வது முதல் 4வது ரீச் வரை திறக்கப்படும் நீரின் மூலம் தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த பொட்டல் கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி தாலுகா எல்லையான வெங்கடரங்கபுரம் வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து 3வது மற்றும் 4வது ரீச் பகுதிகளுக்கு கடந்த டிச.9ல் இக்கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து 3 மற்றும் 4வது ரீச்சுக்குட்பட்ட சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் முழுமூச்சுடன் விவசாயப் பணிகளை துவங்கினர்.

தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 110 அடிக்கும் மேல் வந்ததால் 1 மற்றும் 2வது ரீச்சில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த ரீச்சிற்குட்பட்ட சுமார் 13 ஆயிரம் விளைநிலங்களிலும் விவசாயிகள் பணிகளை துவங்கினர். தற்போது அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜன.6ல் பட்டங்காடு கிராமம் அருகே கால்வாயில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது ராட்சத பாறைகளும் சரிந்து விழுந்ததால் உடனடியாக கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட இடம் சுமார் 80 அடிக்கும் மேல் ஆழமான பகுதி என்பதால் சீரமைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு முழுமூச்சுடன் சரிந்த மணல் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு கிரேனில் பெரிய அளவிலான தொட்டி அமைத்து சரிவில் சிக்கியுள்ள பாறைகள் மற்றும் மண்களை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக சீரமைப்பு நடைபெறுவதால் விவசாயப் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொதுப்பணித்துறையினரின் துரித மீட்புப்பணியை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags : canal , Landslide work on Manimuttaru 80 feet canal will continue for the 3rd day
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...