×

பொங்கல் பண்டிகையையொட்டி மாடு, கன்னிமார் உருவ சிலைகள் செய்யும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புஞ்சை புளியம்பட்டி அருகே மாடு, கன்னிமார், நாய் உள்ளிட்ட மண் உருவ சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம், அலங்காரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அருகே உள்ள காவிலிபாளையம் குளத்தில் அரசு அனுமதி பெற்று மண் எடுத்து சீசனுக்கு தகுந்தாற்போல் கோடைகாலங்களில் மண்பானைகள், மண் அடுப்புகள், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அகல் விளக்குகள், மார்கழி மாதத்தில் தைப்பொங்கலுக்கு தேவையான பசுமாடு, வேட்டை நாய், கருப்பராயன், தன்னாசி, கன்னிமார் சிலை உள்ளிட்ட மண் உருவ சிலைகள் தயார் செய்து விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் வராததால், மண்பாண்ட தொழில் நலிவடைந்த நிலையில் தைப்பொங்கலை முன்னிட்டு ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளது. இதனால், மண் உருவ சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

   இது குறித்து காவிலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி காசியப்பன் கூறியதாவது: ‘மாட்டுப்பொங்கலன்று விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தெய்வமாக வணங்குவதால், அன்று புதியதாக மண் உருவத்தில் செய்யப்பட்ட மாடு சிலைகளை வாங்கி பொங்கல் வைத்து படைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதேபோல், வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் வேட்டை நாய்கள் அடிக்கடி இறந்து விடுவதால், நாய்கள் இறக்காமல் இருப்பதற்காக மண் உருவ வேட்டைநாய் சிலைகளை வாங்கி வைத்து வழிபாடு செய்வர். மேலும் பொங்கல் பண்டிகையின் போது, புதியதாக கன்னிமார், கருப்பராயன், தன்னாசி உள்ளிட்ட மண் உருவ சிலைகளை புதியதாக வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு ஓரளவு விற்பனை நடந்த நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா தாக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளதால், மண்பாண்ட தொழில் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் மண் உருவ சிலைகள் கோபிசெட்டிபாளையம், நம்பியூர், திருப்பூர், அவிநாசி, சேவூர், புஞ்சை புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.



Tags : virgins ,festival ,Pongal , On the occasion of Pongal festival Intensity of work on making idols of cows and virgins
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா